எல்லாருமே வாழ்க்கையில் எதிலாவது ஒரு உச்சத்தைத் தேடிப் போராடிக் கொண்டு இருப்பவர்களே. ஒன்று முடிந்ததும் மற்றொன்று; அது முடிந்ததும் இன்னொன்று என, உச்சத்தின் அளவு இலக்குக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும்.
எல்லாவற்றிற்கும் அடிப்படையான காரணிகள் ஊக்கம், உழைப்பு, திட்டமிடல், அர்ப்பணிப்பு! உச்சம் அடைவதற்கான இலக்கு வைத்துவிட்டு, அதை அடைவதற்குப் போராடும் அக்கறை உள்ளவர்களால் மட்டுமே எந்த இலக்கையும் அடைய முடியும்.
தொழில் முனைவோராக இருந்து தொழில் வல்லுனரான சுப்ரதோ பாக்ச்சியின் மூல நூலின் தமிழாக்கம் இந்நூல்.
தொழில் துறையில் உச்சம் அடைவதற்கான வழி முறைகளையும், செயலாக்க உத்திகளையும் விளக்கும் இந்நூல், அவரது நெடுங்கால தொழில் உலக அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு செல்வதாக இருக்கிறது.
ஒரு நிறுவனத்தை வெற்றிகளை நோக்கி இட்டுச் செல்லும் தலைவருக்கான தகுதிகள், எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை, தொழில் திட்டத்தில் கொள்ளவேண்டிய புரிதல்; புரிதல் இல்லாமையால் வரக்கூடிய பின்னடைவுகள், நிறுவனத்தை பெரிய அளவில் எடுத்துச் செல்வதற்கான லட்சியம்.
உள்கட்டமைப்பு அவசியங்கள், திடீர் நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன், பெரிய இலக்குகளைக் குறிவைத்தல் என, பலவற்றையும் அத்தியாயப்படுத்தி முன்வைக்கிறது இந்நூல்.
வளர்ச்சியை நோக்கிச் செல்லும் நிறுவனம் என்னென்ன வகையில் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், எப்படி பிரச்னைகளை எதிர்கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
அடுத்த தலைமுறைத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் அவசியங்களையும் அலசுகிறது இந்நூல். பிற நிறுவனத்தைக் கையகப்படுத்துதல் போன்றவற்றையும் விளக்குகிறது.
போட்டியாளர்கள் நிறைந்திருக்கும் வியாபாரச் சூழலில், பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே விற்பனையில் உச்சத்தில் இருப்பவர்கள் கடந்து வந்த பாதையைப் படிக்க வேண்டும். இந்நூலை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் சித்தார்த்தன் சுந்தரம். பல இடங்களில் ஆங்கிலப் பதங்களை அப்படியே பயன்படுத்தாமல் தமிழ்ப்படுத்தி இருக்கலாம்.
மொழிபெயர்ப்பின் எளிமையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், புதிய தலைமுறையினரின் எளிதான வாசிப்பிற்கு ஏற்றதாக இருந்திருக்கும். புதிய தொழில் முனைவோருக்கும், கல்வியை முடித்துவிட்டு எந்தப் பின்புலமும் இல்லாமல் தொழில் ஆரம்பிப்பவருக்கும் சில வழிகாட்டுதல்களை இந்நூல் வழங்கக்கூடும்.
– மெய்ஞானி பிரபாகரபாபு