நம் வாழ்க்கைப் பாதை மிகவும் மாறிப் போய் கொண்டிருக்கிறது. உணவு முறைகள், உடை, பழக்க வழக்கங்கள் மாறியுள்ளன. கவலை குடிகொண்டு நிம்மதிஇல்லை. நம் சிந்தனை எவ்வழியில் உள்ளது? நம் மகிழ்ச்சி கெடுவதற்கு காரணங்கள் எவை? எதிர்மறை சிந்தனைகள் ஏன் வருகின்றன? இவற்றைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில், மனதை சரிப்படுத்த வேண்டும். மன ஒருமைப்பாடு எல்லாருக்கும் மிகவும் தேவை. நம் முன்னேற்றம், சாதனை, வெற்றி எல்லாம் நம் கையில் தான் உள்ளன. மனநலம் ஓங்கினால் அனைத்தும் நலமாகும். இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள அறிவுறுத்தல் நூல் இது.
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு என்ற தலைப்பே நூல் எதைப் பற்றியது எனத் தெளிவுபடுத்துகிறது.
இன்னும் சற்று மேலே சென்று, தத்துவ விளக்கம் காணவும் நூலாசிரியர் முற்பட்டுள்ளார். நம் இயல்பு வாழ்வைத் தாண்டி, நாம் எதற்காகப் பிறந்தோம்? வாழ்வின் உண்மையான நோக்கம் என்ன? தன்னையறிதல் என்றால் என்ன? நம் வேதாந்தம் என்ன சொல்கிறது?
-இப்படிச் சில வினாக்களைத் தொடுத்து விடை காண நம்மைத் தூண்டுகிறார் ஆசிரியர்.
மனமும் உடலும், உண்மையான கல்வி, தனித்துவம் வேறு, தனிமை வேறு, உள்நோக்கி ஒரு பயணம், திருவள்ளுவர் போற்றும் சான்றோர் யார்? தியானமும் அன்றாட வாழ்வும்...
இப்படி, 55 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பல்வேறு வார, மாத இதழ்களில் வெளிவந்தவை. நேரிய சிந்தனைகளை வளர்த்து விடாமுயற்சியை உடையவராய் வெற்றி காண முயல்பவருக்கு உதவும் வழிகாட்டி நூல் இது. நல்ல தாளும், அழகான கட்டமைப்பும் நூலுக்கு அழகூட்டுகின்றன.
– கவிக்கோ ஞானச்செல்வன்