ஆயிரம் ஆண்டு விழா நாயகர் ஸ்ரீ ராமாநுஜர். இவரது வாழ்க்கை வரலாறு ஆன்மிகப் புரட்சியின் அடையாளம். 1017ல் தோன்றி, 1137 வரை வாழ்ந்து, விசிஷ்டாத் வைதத்தை உலகில் நிலை நிறுத்திய விதம் இந்த நூலில் தேன் சுவையில் தரப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவ உலகில் செய்த சாதனைகள் விளக்கப்பட்டு உள்ளன.
எளிமையும், இனிமையும் தவழும் பி.ஸ்ரீ.ஆச்சாரியாரின் பக்திமிகு தமிழ்நடை, படிப்பவரை ஸ்ரீ ராமாநுஜரின் பக்தர் ஆக்கிவிடும்.
‘தூயவன் தீதுஇல் ராமாநுசன்’ என்று அமுதனார் போற்றியபடி, அவர் மகோன்னதமான வாழ்க்கை வரலாற்றையும், குணாதிசயங்களையும், படைப்புகளையும், தத்துவங்களையும், 29 தலைப்புகளில் இனிமையாக எழுதியுள்ளார்.
திருவரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு, 18 தடவை ராமாநுஜர் நடந்து சென்றார். குருநாதர் நம்பிகளோ, ‘இன்னொரு சமயம் வாரும்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தவர், ‘ஒரு மாதம் உண்ணாவிரதம்’ இருக்கச் சொன்னார்.
நடந்து நடந்து, 18 நாள் தண்ணீரும் பருகாமல் பட்டினி கிடந்து தான் பெற்ற மந்திரத்தை திருக்கோட்டியூர் மக்களுக்கு ராமாநுஜர் உபதேசித்தார். அதனால், அவர் நரகம் செல்லவும் சித்தமானார்.
இந்த திருப்புமுனை வரலாற்றை விருப்பமுடன் படிக்குமாறு, ‘வள்ளல்’ எனும் முதல் தலைப்பில் வழங்கியுள்ளார். நம்மாழ்வாரை வைணவத்தின் முதல் தாயாகவும், ராமாநுஜரை வளர்ப்புத் தாயாகவும் காட்டியுள்ளார்.
சில வரிகள் நூலில் வைரமாக ஜொலிக்கின்றன. ‘மனதில் கவலைக்கு இடம் கொடுக்காமல், கடவுளுக்கே இடம் கொடுக்க வேண்டும். பகவான் மீதுள்ள நம்பிக்கைக் குறைவு தான் கவலைக்குக் காரணமாகும்’ (பக். 65).
குடும்ப உறவைத் துறந்து, ராமாநுஜர் துறவி ஆனதற்கு மனைவி தஞ்சமாம்பாளின் ஜாதிய உணர்வும், தயை இன்மையுமே காரணங்கள். மூன்று முறைகள் இதையும் பொறுத்துக் கொண்டு முடிவில் துறவியாகி விடுகிறார்.
குரு திருக்கச்சி நம்பிகளுக்கு சோறு போட்ட பின், தீண்டாதவர் என்று குளித்து விட்டு வந்ததும், பிச்சைக்காரனுக்கு சோறு இல்லை என்றதும், பெரியநம்பிகளின் குரு பத்தினியோடு குரோதம் கொண்டதும், கண்டதும் மனைவியையே தியாகம் செய்து துறவியானதை தர்க்க முறையில் சிறப்பாக விளக்கிய விதம் மிக அருமையாகும்.
ஸ்ரீரங்கத்தின் பூஜை முறைகள் உருவாக்கியதும், திருமலையில் நந்தவனம் கண்டதும், விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதியதும், தமிழக வரலாற்றோடு இவரது தொண்டுகள் இணைந்து செல்வதும் நூலில் படிக்கப் படிக்க இன்பம் தருகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்.