நினைவில் வாழும் வரலாற்றறிஞர் மா.ரா.,வின் பல்லவர் வரலாறு, பெரிய புராண ஆராய்ச்சி ஆகிய புகழ் பெற்ற நூல்களின் நிரலில் இந்நூலும் ஒன்று.
இந்நூலின் முதல் இரு கட்டுரைகளிலும், எஞ்சிய, 18 கட்டுரைகளின் ஊடேயும் மொழி வரலாறும் வருவதால் இது மொழி வரலாற்று நூலுமாகிறது. அதனாலேயே தமிழ்மொழி என்பதை ஒட்டி சிறுகோடொன்று – நூற்பெயரில் காணப்படுகிறது.
இறையனார் களவியலுரை கூறும் முக்கியங்களை இவர் அப்படியே ஏற்கவில்லை. காரணம், முதலிரு சங்கங்கள் இருந்தமைக்கு இலக்கியச் சான்றுகளும், பட்டச் சான்றுகளும் இல்லை என்பதாகும். எனினும், மதுரையில் சங்கத்திற்கு முற்பட்ட காலங்களில் தமிழ்ப் புலவர்கள் கூடும் சில அமைப்புகள் இருந்திருக்கலாம் என்றெழுதுகிறார். இக்கருத்துகளுக்கான காரணங்களையும் குறிக்கிறார்.
சங்க காலம் என்பது கி.பி., மூன்றாண்டு வரை என்பது இவரின் கணிப்பாக உள்ளது. அதனால், சங்க நூல்கள் நிரலில் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை மட்டுமின்றிச் சிலப்பதிகார மணிமேகலைக் காப்பியங்களையும் சேர்த்தே இலக்கிய வரலாறு செய்துள்ளார்.
சங்க கால வரலாற்றில் இந்திய, இலங்கை வரலாறுகளையும் இணைத்துரைப்பது சிறப்பாகும். தொல்காப்பிய வரலாற்றையடுத்துத் திருக்குறள் வரலாற்றை அமைத்த நிரவலும் அருமைப்பாடுடையதே. வடசொற்களைத் தமிழோசை யூட்டியே ஏற்க வேண்டும் என்ற கருத்தைத் தொல்காப்பிய
வரலாற்றில் குறிக்கிறார்.
‘முந்நீர் வழக்கம் மகடூவவோடில்லை’ என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு ‘ஓதல், பகை, தூது என்னும் மூன்று நீர்மையதாகிய பிரிவுகளுக்குகாகக் கடற்பயணம் செய்யும்போது, மனைவியை அழைத்துச் செல்லலாகாது’ என்ற உரையையும், ‘கடற்பயணம் யாவற்றிலும் பெண்களை அழைத்துச் செல்லலாகாது’ என்ற உரையையும் தாண்டி, வணிக நிமித்தம் செல்லும் கடற்பயணத்தின்போது மகளிரை உடனழைத்தேகலாகாது என்ற கருத்தை முன்
வைக்கிறார்.
சங்கத் தொகை நூல்கள் அனைத்தின் வரலாறுகளிலும், பாடலாசிரியர்கள் அனைவரின் பெயர்களையும் அகர நிரலில் பட்டியலிட்டிருப்பதும், நூலிறுதியில் சங்கப் புலவர்கள் ஐந்நூற்றைம்பத் திருவரின் பெயர்களையும் அகர நிரலில் தந்திருப்பதும், இவர் கருத்தின்படியாகச் சங்க நூல்கள் இருபத்தொன்றுக்கும் காலக்கணிப்புச் செய்திருப்பதும், நூற்செய்திகளை ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்னும் அழகு பொருந்த வழங்கியிருப்பதும் தமிழ்ப் புலவர்கள், தமிழார்வலர்களுக்குப் பெரும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை.
பூம்புகார் பதிப்பகத்தின் முதற்பதிப்பு இது என்பது புரிகிறது. முன்பு வந்த பதிப்பு ஆண்டுகள் பற்றித் தெரியப்படுத்தியிருந்தால், பதிப்பாய்வு செய்யும் இள மாணாக்கர்களுக்கு பயன்பட்டிருக்குமே.
– ம.வே.பசுபதி