பண்பாட்டுத் தடயங்களே மொழியின், அது பேசும் இனத்தின் முன்னேற்றப் பதிவுகள். சம கால தமிழ் மண்ணின் அடையாளங்களை எட்டு தலைப்புகளில் ஆசிரியர் எடுத்து எழுதியுள்ளார். தன் வாழ்வியல் அனுபவங்களை சமூக சிந்தனைகள் கலந்து, கருத்தரங்க நோக்கிலும் இதழ்களிலும், எழுதியதன் தொகுப்பு இது. ஆசிரியரின் அனுபவ முதிர்ச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவாக இனிக்கிறது.
வெகுசனப் பண்பாட்டில் மருந்து கடை விளம்பரங்கள், புத்தகமோ புத்தகம், பதிப்பக அரசியல் பின்புலம், தமிழ்ப் பாடத்திட்ட உருவாக்க அரசியல், இலக்கிய விருதுகளும் சில வினோதங்களும், அம்மாவின் உலகம், எனக்குள் படிந்திருந்த நான், மேடைப் பேச்சுக்கள், மாற்றமும் சிதைவும் பெற்ற தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் ஆகிய தலைப்புகளில் சிந்தனைகள் தடம் பதிக்கின்றன.
மருத்துவரிடம் போகாமல், விளம்பரங்களைப் படித்து மருந்து வாங்கி உண்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை, 70 ஆண்டு வரலாற்றோடு எழுதி உள்ளார்.
பதிப்புத் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், வாசகரின் நோக்கங்களையும் குறித்துள்ளார்.
முடிவில், புத்தகம் என்ற சாத்தான் கவர்ச்சி மிக்கதாகப் பலரையும் இழுத்துக் கொண்டிருக்கிறது என்று தீர்ப்பளிக்கிறார். சராசரி நூலுக்கு சாகித்ய அகாதெமி விருந்தளித்தபோது, சுந்தர ராமசாமி பட்ட பெருங்கவலையை பதிவு செய்துள்ளார்.
விருதுகளில் ஜாதிகளும், தகுதியாகக் கருதுகின்றனர் என சாடியுள்ள குற்றத்தை முழுதாக மறுக்க இயலவில்லை. மேடைப் பேச்சு கவர்ச்சி, அம்மாவின் அன்பு முதிர்ச்சி பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார்.
– முனைவர் மா.கி.ரமணன்