சென்ற நூற்றாண்டின் மகத்தான மார்க்சிய கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவுகூரலாகவே யமுனா ராஜேந்திரனின் இந்நூல் உள்ளது.
ஆளுமைகள், பண்பாட்டு வரலாறு, அரசியல், பயணக் கட்டுரைகள் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது இந்தப் புத்தகம்.
ஆளுமைகள் பகுதி யில் ரோஸா லக்ஸம் பர்க் பற்றிய கட்டுரை சிறப்பானது. போலந்திலிருந்து வந்த யூதப் பெண்மணி இவள்.
ஜெர்மானிய ஒடுக்குமுறையாளர்களின் கட்டளையின்படி படுகொலை செய்யப்பட்ட ஜெர்மானிய தொழிலாளர்களுக்காகப் போராடி ய வீரப் பெண்மணி இவள்.
ரோஸா லக்ஸம்பர்க்கின் மரணம் குறித்துப் பேசுகிறார் ஆசிரியர்.
அரசியல் பகுதியில் மார்க்சியர்களும் பாலுறவும், அறமும் ஆய்வறிவும் என்ற கட்டுரை முக்கியமானது, காரல்மார்க்சுக்கும் அவரது வீட்டின் பணிப் பெண்ணும் அவரது தோழியுமான ஹெலன் டெமுத்திற்குமான உறவு இன்றளவிலும் விவாதத்திற்கும் சர்ச்சைகளுக்கும் ஆய்வுக்கும் உரியதாகத் தான் இருக்கிறது.
மார்க்சியத்தின் மூல ஆசானைக் கொச்சைப்படுத்திவிட மார்க்சியத்தின் எதிரிகள் மிகக் கேவலமான சொற்களில் இப்பிரச்னையைக் கையாள்கின்றனர் என்று வருத்தப்படுகிறார் நூலாசிரியர்.
பயணக் கட்டுரைகள் பகுதியில், நகர்வாசமும், வீடு பெறலும், பதினோரு தொறான்ரோ நாட்கள் ஆகிய கட்டுரைகள் சிறப்பாக அமைந்துள்ளன.
மார்க்சையும், மார்க்ஸிஸத்தையும் போற்றும் சிறந்த விமர்சன நூல்.
– எஸ்.குரு