இயற்கையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட வாழ்க்கையில் அன்பையும் பண்பையும் மிதித்துக்கொண்டு அகங்காரமும் கோபமும் மனிதனை ஆக்கிரமிக்கின்றன. மனிதநேயம் நசுங்கிச் சுக்கலாகிறது. இயற்கையிலேயே அழகாக இருக்கும் வாழ்க்கைக்கு அரிதாரப் பூச்சுகள்.
இதில் கேள்விகளும் எதிர்க்கேள்விகளும் தான் நாம் யாரென்று நமக்கு அடையாளம் காட்டுபவை. மாற்றுக்கருத்துகளும் எதிர்க் கருத்துகளும் மனித சிந்தனை முறையின் தவிர்க்க முடியாத அம்சங்கள்.
சுயநலத்தில் ஊறிக்கொண்டு ஞானத்தை அடையவே முடியாது. அதற்காக தியானத்தைப் பயன்படுத்தவும் முடியாது போன்ற ஜென் தத்துவங்கள் விரவிப் படைக்கப்பட்ட நூல் இது. இதன் அடிப்படையில், கைப்பிடியளவு நிகழ்கால சிறுகதைக்குள், 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜென் துறவி டோஜன் சென்ஜியின் உருவமற்ற கதாபாத்திரத்தைப் பிணைத்து சுவாரசியமாகத் தொடங்கி கனமான பவுத்த ஜென் வரலாறுகளை விரித்துச் சொல்லும் நூல் இது.
சீனாவில் பவுத்த வேர்களை ஆழ ஊன்றிய காஞ்சிபுரத்து போதி தர்மர் குறித்த விரிவான தகவல்களும் நூலில் உண்டு.
கதையில், நித்தின் தன் முன்னேற்றத்துக்காக எந்த சக ஊழியரையும் பலிகொடுத்து முன்னேறத் துடிக்கும் ஒரு பன்னாட்டுக் கார்பரேட் சாப்ட்வேர் கம்பெனி இரவு ஊழியன். அடுத்தவன் உழைப்பில்தான் தனக்கான வளர்ச்சி என்பதுதான் கார்பரேட் பாலபாடம். இருபத்திநாலு மணி நேரங்களை இரண்டு மூன்று வினாடிகளில் கடந்து விடும் அதிவேக வாழ்க்கையில், வெறுப்புக்குள்ளாக்கும் வேலைக் கலாசாரம், இன்னும் பல அம்சங்கள் இதில் நிரந்தரம்.
இவற்றுக்குள் பொருந் தும் ஒரு குழுத்தலைவன்தான் நித்தின். அறிவு சொல்வதையும் கேட்காமல் தன்போக்கில் செல்பவன்.
இரவா பகலா, என்ன தேதி, என்ன நேரம் என்பதுகூடத் தெரியாமல் இயங்கி, ஒரு கட்டத்தில் உளைச்சல் புதருக்குள் மனப்பிராந்தியால் தவிப்பவனை நனவிலிக் கனவுகள் வந்து வாட்டுகின்றன.
அங்கு, நித்தின் முன் தோன்றி டோஜன் சென்ஜி நிகழ்த்தும் உரையாடல்கள் லாவகமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. அவனது உள்மனதின் ஓட்டங்களையும், திட்டங்களையும் அறிந்து உடனுக்குடன் பதிலடி கொடுத்து, ஜென் கதைகளும் சொல்லித் திக்குமுக்காட வைக்கிறார். இறுதியில் அவனால் பாதிக்கப்பட்டவளிடமே அவனைச் சரணடைய வைக்கிறார்.
இந்த நவீன சிறுகதையை அச்சாணியாக்கி விரிவான ஜென் வரலாறு சுற்றிச் சுழல்கிறது. பவுத்த தத்துவங்கள் அங்கங்கே நிறம் தீட்டுகின்றன. கதையினூடே, வெகுஜன வாசிப்புத்தளத்தில் அறிந்திராத ஜென் கதைகளையும், தொன்மையான பவுத்த வரலாறுகளையும் சரள நடையில் வழங்குகிறார் நூலாசிரியர் நவீனா அலெக்சாண்டர்.
நம்மை அறிவதுதான் ஜென்; ஜென்தான் பவுத்த ஞான விடுதலை என்கிறார்.
சீன இறையியல் மற்றும் கோட்பாடுகளுக்குப் பின்னர் தாவோயிசம், கன்பூசியனிசம் தோற்றங்கள் உட்பட பல தகவல்கள் உள்ளன, நூலெங்கும் உள்ள அச்சுப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். படிக்க வேண்டிய நூல்.
–மெய்ஞானி பிரபாகரபாபு