‘‘பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’’ என்ற பழைய பாடல், பக்றுளி ஆறும், பல மலைகளும் கடலால் சூழப்பட்டு அழிந்து போயின. பல இலக்கண, இலக்கிய நூல்களும் அழிந்தன என்று வரலாறு கூறுகிறது.
தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளின் துணையோடு’ 58 – துணை நூல்களின் மேற்கொள்களுடன், புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும் என்ற நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலக்கிய உளப்பகுப்பாய்வு, கபாடபுரம், நடப்பிலி உணர்வு கனவோடை, முலப்படிவங்களின் கூட்டுப்படைப்பு, குறியீட்டை தேடும் குறிப்பான் ஆகிய தலைப்புகள் விளக்கம் பெறுகின்றன.
காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிற, தகுதி படைத்த மொழிகளுள் தமிழும் ஒன்று என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிச் செல்வது அருமையிலும் அருமை.
பூகோ என்ற அறிஞரின் கருத்துப்படி, பல நூற்றாண்டு காலமாகப் பாலுணர்வு பற்றிய உண்மையைக் கண்டறியும் முறையின் தொடர்ச்சியே உளப்பகுப்பாய்வாகும்.
இலக்கியம் என்பது மன அவசியத்தின் எழுச்சியே ஆகும், என்று புதுமைப்பித்தனின் கருத்துக்களைக் கூறி, கடல் கொண்ட கபாடபுரத்தை கற்பனை நயத்துடன் விளக்கி செல்வது வியக்கவைக்கிறது.
நனவோடை என்பது படைப்பாக்க உத்திகளுள் ஒன்று. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் படைப்பாளிகள் இந்த உத்தியைக் கொண்டு பல படைப்புகளை படைத்துள்ளனர். (பக்.59) யூங்கின் கருத்துப்படி, ஒரு பொருள் எப்படி இருக்கிறது என்பது அதன் இயல்பில் அல்ல, மாறாக அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொருத்தது. நாம் அனைவரும் ஒன்றே.
உடற்கூறுபாடுகளுள் மட்டும் அல்ல, உளக்கூறுபாடுகளிலும் அப்படித்தான் என்பது யூங்கின் கருத்தாகும்.
குறியீட்டைத்தேடும் குறிப்பான் என்ற தலைப்பில் இலக்கியம் குறிப்பிடும் பொருண்மையை ஆசிரியர் அழகாகச் சூட்டியுள்ளார்.
கம்பராமாயணத்தின் பொருண்மை, பிறன் மனை நயவாமை, சிலப்பதிகாரத்தின் பொருண்மை ஊழ் அல்லது கற்பு நெறி தவறாமையாகும். இலக்கிய வாசிப்பு ஒரு ரசனை என்றால் இலக்கியத் திறனாய்வு இன்னொரு ரசனையாகும்.
புதுமைப்பித்தன் தமிழின் உன்னத படைப்பாளி இக்காலத்திற்கு ஏற்ற சிறுகதைகள் பலவற்றை அன்றே கண்டவர். ஆழ்ந்த வாசிப்பிற்கும் திறனாய்வு செய்வதற்கும் இவரது படைப்புகள் வழிகாட்டியாக அமைந்துள்ளன.
நூலின் நிறைவுறையில், ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற நூலை முடித்து வாசகருக்கு உள்ள முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளார். இலக்கிய ஆய்வாளர்களுக்கு இந்நூல் பெரிதும் துணை செய்யும்.