எது ஒன்று இல்லாவிட்டால் நம்மால் வாழ முடியாதோ அதைப் போற்றி வாழ்வதே அறிவுடைமை என்று படித்ததுண்டு. ஆணும், பெண்ணும் சமூகக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத அங்கங்கள். ஆனால், இன்பமாய் செல்லும் இல்லறம் பலருக்குக் காலப்போக்கில் கசப்பதற்குப் பெண்களையே காரணமாகக் காட்டுகிறது இந்நூல்.
கூர்மையான பார்வைகளுக்குத் தெரியும் பெண்கள் பலவீனர்களோ, துணிச்சலற்றவர்களோ அல்ல என்பது. உலக வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளத்தின் வலிமையையும், உடை நாகரிகங்களையும் துணிச்சலோடு மாற்றிக் கொண்டு வருபவர்கள் பெண்களே. ஆணாதிக்கம், அடக்கு முறைகள், இழிவுகள், விதவைத் திருமண மறுப்பு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணச் சிறை, வரதட்சணைக் கொடுமைகள் போன்ற பல சமூக அவலங்களுக்கு இடையே வெடித்து எழுந்து, இன்று உலகின் பல துறைகளில் முன்னணிக்கு வந்து விட்டனர்.
நூலில், பெரும்பான்மையான பெண்களால் ஆண்களின் நிம்மதி சிதைகிறது எனும் நூலாசிரியரின் பார்வை முற்றிலும் வேறாக இருக்கிறது.
இல்லறம் என்னும் ஆயுட்கால நிறுவனத்தை முன் அனுபவமின்றி ஏற்று, குறிப்பிட்ட வருவாய்க்குள் திறமையாக நிர்வகிக்கும் பெண்களின் பெருமைகளையும், மென்மையான குணங்களையும் விரிவாகக் குறிப்பிட்டிருக்கலாம்.
இன்றைய அறிவியல் சூழலில் தன்னலம் கருதாமல் பிள்ளைகளை உயர்த்திக் கொணரும் பாடுகள், தூய்மையான பாசம் கிடைக்கும் ஒரே இடமாக விளங்கும் தாய்மை, தன்மானம் பிறழாமல் இல்லறம் காக்கும் மன உறுதி, பெரும்பாலான ஆண்களின் பொறுப்பின்மை போன்றவற்றை விளக்கமாக அலசியிருந்தால், நூலில் எதிர்மறைப் பார்வைகளின் வீச்சு மாறியிருக்கும்.