‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று புகழப்படும் நகுலனின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் எழுத்தாளராக நிலை கொண்டவர். திருவனந்தபுரம், ‘மார் இவானியஸ்’கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். நகுலன், நவீனன், எஸ்.நாயர், ஜான் துரைசாமி என பல பெயர்களில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என, நவீனத் தமிழ் இலக்கியத்தின் சகல தளங்களிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதியவர். ஆங்கிலத்திலும் நாவல், கவிதை, கட்டுரை என, பல நூல்களை எழுதியிருக்கிறார்.
நகுலன் இறுதி நாட்களில் வறுமையிலும், தனிமையிலும் வாடியிருக்கிறார். ‘இருப்பதற்கென்று தான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்’
என்பதையே, இதைத் தான் தன்னுடைய இறப்பு நிகழ்வில் கூட பாரதிக்கு நேர்ந்தமை போல், மிகச் சொற்பமான நபர்கள் (வெறும், 17 பேர், உறவினர்கள் உட்பட) மட்டுமே கலந்து கொள்வர் என அறிந்து, ‘நான் இறந்த பிறகு எனக்குக் கூட்டம் நடத்த வேண்டாம்.
ஏனென்றால், என்னால் அந்தக்கூட்டத்துக்கு வர முடியாது’ என, சொல்லி சென்றிருக்கிறார்! நகுலனின் சிறுகதைச் சித்தரிப்பு முறை, நாவல் படைப்பாக்கத் திறன், கவிதைக் கலை, திறனாய்வுப் பாங்கு, நூல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு மற்றும் இதரப் படைப்பு முயற்சிகள் என்று, பல தளங்களிலும் அவர் சரளமாக இயங்கியதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
நகுலனையும், அவர் படைப்புகளையும் பெருமளவு புரிந்து கொள்ள உதவும் அருமையான நால்.
– மயிலை கேசி