இந்நூல், ஸ்ரீ சாயம் தேவனின் வழித்தோன்றலான ஸ்ரீ நாமதாரகன் என்பவர் மராத்திய மொழியில் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட தமிழ் வடிவம். ஆதிகுரு என்றழைக்கப்படும் மும்மூர்த்தி வடிவமாக விளங்கும் போற்றுதலுக்குரிய ஸ்ரீதத்தாத்ரேயர் அருளிய அருட்செயல்களை விவரிக்கிறது. குருவான சித்தருக்கும், சீடரான நாமதாரகன் எனப்படும் கங்காதர சரஸ்வதிக்கும் இடையே நிகழும் உரையாடல் வழி பல அற்புதச் செயல்கள், கதை வழியாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.
சித்த முனிவர் நாமதாரகனிடம் சொல்லும் ஒவ்வொரு கதையும் சுவைபட அமைந்துள்ளது. அவ்வாறமைந்த, 60 நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல்.
குரு சொல்லும் கதையினுள், தனக்குத் தோன்றும் ஐயப்பாடுகளை சீடன் வினவி அறிந்து கொள்வதாகவே, ஒவ்வொரு அத்தியாயமும் விளங்குகிறது. அதன் வழியே குருவின் மேன்மை வெளிப்படுகிறது. குரு பக்தியின் மேன்மை, குருவால் உண்டாகும் பலன்கள், நூல் முழுக்க குரு அனுபவமே பரந்து பட்டுள்ளது.
ஒவ்வொரு அத்தியாயமும், குருவின் மேன்மையால் என்னென்ன நன்மைகள் கிடைத்தன என்பதைக் கதையாக விவரிக்கிறது. முதல் அத்தியாயத்தில், ஸ்ரீகுரு நரசிம்ம சரஸ்வதி பற்றிய செய்தியில் காணப்படும் முறையீடு அழகுற உணர்த்தப்பட்டுள்ளது. படைப்புத் தொழில் குறித்த விவரிப்பில் யுகங்களைப் பற்றிய செய்தி தெளிவுற அமைக்கப்பட்டுள்ளது. குருவின் மேன்மை என்ற பகுதியில் அமைந்த கலி பற்றிய தகவல், வேத தர்மா, சாந்தீபகாவின் குரு பக்தி ஆகியவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளன.
அக்ரி முனிவரின் மனைவி அனுசூயா பற்றிய புராணக் கதை சுருங்க உரைக்கப்பட்டுள்ளது. கோகர்ணத்தின் கதை என்ற பகுதி, ராவணன் கயிலையைத் தூக்கிய கதைகளைக் கூறுகிறது. இந்நூல் உணர்த்தும் சில அற்புதச் செயல்களாக, இறந்த மகனை உயிர்ப்பித்தது; எருமைப் பால் கறக்கும்படி செய்தது.
சாவித்திரியின் கணவன் இறந்த பின் உயிர்ப்பித்து எழுந்தது; ஐந்து வயதான கங்காபாய்க்கு மகப்பேறு நல்கியமை; முகமதியனுக்கு அருள் புரிந்தது முதலியவை கதை வழி கூறப்பட்டுள்ளன.
தத்தாத்ரேயரின், 24 குருமார்கள், அவர் தொடர்புடைய திவ்ய தலங்கள், ஆகியனவும் அடங்கி உள்ளன. பக்தி உணர்வுடையோரை பரவசத்தில் ஆழ்த்தும் நூல் இது.
– ராம.குருநாதன்