‘எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும், மண்ணிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள்’ என்று வாழ்ந்த அடியார்களின் வரலாற்றை, சுந்தரரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையை அடியொற்றி, சேக்கிழாரால் பாடப்பெற்ற பெரிய புராணத்தின் வரிசை முறையை மாற்றாமல், அதே வரிசையில் எளிய நடையில் நூலாசிரியர் சிறப்பாக எழுதிஉள்ளார்.
ஆறுமுக நாவலரின் பெரிய புராண வசனம் துவங்கி, அண்மைக்காலம் வரை, பெரிய புராணம் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.
அரு.ராமநாதன் மேற்பார்வையில் துர்க்காதாஸ் எஸ்.கே.ஸ்வாமி வசன வடிவில் எழுதி, பிரேமா பிரசுரம் வெளியிட்ட அறுபத்து மூவர் கதைகள் நூலே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும்.
இந்நூலும் திருமலைச்சிறப்பு துவங்கி, கயிலையில் தோன்றிக்கயிலையில் முடிதல் (சுந்தரமூர்த்தி நாயனாரின்வரலாற்றின் பிற்பகுதி – வெள்ளை யானை) என, 78 தலைப்புகளில் அமைந்துள்ளது. ஒவ்வொரு அடியார் பற்றியும் சிறு சிறுதலைப்புகளுடன் விளக்கியுள்ளது கூடுதல் சிறப்பு! உலகெல்லாம் எனத் துவங்கி, உலகெலாம் என முடியும் திருத்தொண்டர் புகழை உலகறியச் செய்ய எழுந்த பெரியபுராணம் பற்றிய வசன நூல்கள் வருவது வரவேற்கத்தக்கது.
எளிய நடையில் மிக விரிவாகவும், தெளி வாகவும் எழுதியுள்ள நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. சைவ சமயத்தவர் மட்டுமின்றி, தமிழார்வம் கொண்ட அனைவரும் வாங்கிப்படிக்க, பாதுகாக்க வேண்டிய அருமையான நூல்.
அம்பலக்கூத்தன் அருளாலே அப்படியொரு காவியம் இயற்றுவேன் என்ற சேக்கிழாரின் அடியொற்றி, இந்நூலை அவனருளாலே நூலாசிரியர் படைத்துள்ளார்