மனித குரங்கின் முன்னிரண்டு கால்களை நடப்பதிலிருந்து விடுவித்து கைகளாக்கிய நாளில் இருந்து தான், இந்த பூமிக்கு எண்ணற்ற நன்மை, தீமைகள் நடக்கத் துவங்கிவிட்டன. லட்சக்கணக்கான ஆண்டுகளாக எத்தனையோ உயிரினங்களை வளர்த்து, பொதுவுடைமையைப் பார்த்துப் பழகிய பூமிக்கு, தான் உருவாக்கும் மனித இனம் தன்னையே கூறுபோட்டு ஆட்டிப்படைக்கும் என்று நினைக்கவே இல்லை போலும்.
மனித இனம் உருவாவதற்கு முன்னால், ஐந்து மகா பேரழிவுகளைச் சந்தித்த பூமி முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. இப்போது, ஆறாவதாக ஆறாம் அறிவால் வரவிருக்கும் பேரழிவை எதிர்கொண்டு அதிர்ந்து நிற்கிறது. அதனால், பூமி அழிந்துவிடாது என்றாலும் அந்த மகா பேரழிவுக்குப்பின் பூமி தன்னை எவ்வளவு காலத்தில் மீட்டுருவாக்கம் செய்துகொள்ளும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
தன் சுயநலத்திற்காக பிற உயிர்களையும், சக மனிதர்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழித்து பூமியின் மீதே போர் தொடுக்கும் மனிதன், இவற்றின் ஒட்டுமொத்த விளைவையும் கதிரருக்கும் காலம் மவுனமாக நெருங்கி வருகிறது. சுற்றுச்சூழல் இன்று பல துளைகள் விழுந்த கப்பல் போல் ஆகிவிட்டது. எந்தத் துளையை அடைப்பது? பூமி தன் விருப்பத்திற்கு மாறாக மனிதனால் எவ்வாறு அழிவை நோக்கிச் செல்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகளிலிருந்து தொகுத்து எளிய நடையில் முன்வைக்கிறார் நூலாசிரியர் நவீனா அலெக்சாண்டர்.
முதன்முதலாக இரண்டு காலில் நடந்த பாலுாட்டிகளில் ஒன்றான குரங்கின் இரண்டு கால்களை கைகளாக்கியதால் உடலமைப்பு மற்றும் மூளை வளர்ச்சியில் அளப்பரிய மாற்றங்கள் உருவாகி, பூமியின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப அவை தம்மைத் தகவமைத்துக்கொண்டன. (ஹோமோ) நியாண்டர்தால் என்ற இனமே இன்றைய முழுமையான மனிதர்களாக உருவெடுத்த செப்பியன்கள். செப்பியன்களின் பெருக்கத்தால் பூமிக்கு ஏற்பட்டுள்ள சமீபகால நெருக்கடிகள் வரை விளம்புகிறது இந்நூல்.
நெருப்பு அவர்கள் வாழ்க்கையை சுலபமாக்கியது. உண்ணுதலும் செரிமானமும் விரைவானதில் முழுச் சக்தி மூளைக்குச் சென்றது. உலோகத் தேடல்களும் உபயோகங்களும் தொடர்ந்தன. மொழி உருவானது. பின், பருவ காலத்திற்கேற்ற இடப்பெயர்வுகள், தூரதேசப் பயணங்கள், கண்டெடுப்புகள், கண்டுபிடிப்புகள், கொடுக்கல், வாங்கல் என்று மனிதனின் பயணம் தொடர்ந்தது.
மனிதன் உணவுத் தேடல் என்பதைக் கைவிட்டு உணவு உற்பத்தி என்பதை ஆரம்பித்த விவசாயம்தான் பெரும் பேரரசுகளையும், நாகரிகங்களையும் முதலில் உருவாக்கியது. மூன்றாம் புரட்சியான தொழிற்புரட்சி, 17ம் நூற்றாண்டு வாக்கில் எழுச்சி கண்டது. சந்தை வளர்ந்தது. அடிமைத்தனம் வளர்ந்து சுரண்டல் மேடையேறியது.
காலத்துக்கு கதிர்வீச்சுகளும் புவி வெப்பமாதலும் பூமிக்குள் புதைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், இ - கழிவுகள் மற்றும் கதிர்வீச்சுக் கழிவுகளும் சாமானியனின் அறிவுக்கெட்டாத அபாயங்களாயின. வளர்ச்சிப்பாதை என்று கூறிக்கொண்டு கடந்த, 200 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பிலிருந்து பூமி விடுபடவே பல லட்சம் ஆண்டுகள் தேவைப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.
நூல் குறிப்பு விபரங்களை அந்தந்த அத்தியாயத்தின் அடியில் கொடுத்திருந்தால், வாசகர்கள் முன்னோக்கிச் சென்று விரிந்த அளவில் படிப்பதற்கு உதவி இருக்கும். நூலாசிரியரைப் பற்றிய சூழலியல் பின்புலம் மற்றும் சுய குறிப்பு, பதிப்புரை எதுவும் இல்லாத நிலையில் பிற நூல்களின் தகவல் திரட்டாகவே தெரிகிறது இந்நூல்.
– மெய்ஞானி பிரபாகரபாபு