நம் முன்னோர் தம் பட்டறிவால் கண்டுணர்ந்த பழமொழிகள் எனலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் கொண்ட பழமொழிகள் ஆழ்ந்த பொருள் கொண்டவை. ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பட்டறிவு ஆகியன மிகச் சுருக்கமாகப் பேச்சு நடையில் வெளிப்பட்ட ஒரு சொற்றொடரே பழமொழி.
இவ்வாறு விளங்கும் பல்லாயிரக்கணக்கான பழமொழிகளும், 75 பழமொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு மக்கள் இதுவரை அறிந்து கொள்ளாத நிலையிலான விளக்கங்களை நுணுகி ஆராய்ந்து பல்பொருள் விளக்கத்தையும், அவை நவிலும் வாழ்விலும் விழுமியங்களையும் இனிய எளிய நடையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
பிழைபட அமைந்த பழமொழிகளையும், திரிபு பெற்ற பழமொழிகளையும், மருவி வழங்கும் பழமொழிகளையும் கண்டுணர்ந்து அவற்றிற்குச் செப்பமான வடிவங்களைக் கூறி, அவற்றுக்கான விளக்கங்களைக் கூறி, தம் சமூகவியல் ஆய்வுத் திறத்தைப் புலப்படுத்தியுள்ளார்.
சான்றாக, ‘ஆயிரம் முறை பொய் சொல்லி ஒரு திருமணத்தைச் செய்’ என்னும் பழமொழியின் திருந்திய வடிவம், ‘ஆயிரம் முறை போய்ச் சொல்லி ஒரு திருமணத்தைச் செய்’ எனவும், ‘மாமியார் ஒடச்சா மண்பானை; மருமக ஒடச்சா பொன்பானை’ என்னும் பழமொழியின் திருந்திய வடிவம், ‘மாமியார் உழைச்சா மண் வளம்; மருமகளும் உழைச்சா பொன்வளம்’ எனவும் கூறியுள்ளார்.
‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்னும் பழமொழிக்கு ராமாயணக் கதையையும், ‘ஆறிலும் சாவு; நூறிலும் சாவு’ என்னும் பழமொழிக்கு மகாபாரதக் கதையையும் கொண்டு விளக்குவது புதுமையான சிந்தனை.
‘வாக்கு அறிந்தவனுக்கு வாத்தியார் வேலை; போக்கு அறிந்தவனுக்கு போலீஸ் வேலை’ எனச் செப்பமான வடிவத்தைத் தந்து மருவி வழங்கும் பழமொழிக்கு விளக்கத்தைத் தந்துள்ளார்.
‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்’ என்னும் பழமொழிக்கு இவர் அளிக்கும் விளக்கம், புதிய கோணத்தில் அமைந்துள்ளது. மக்களைப் பண்படுத்தும் வகையில் மருவி, பிழைபட வழங்கும் பழமொழிகளை ஆராய்ந்து, சிறப்பான கருத்துக்களை வழங்கும் நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்கு உரியது.
– புலவர் சு.மதியழகன்