சம கால மொழிபெயர்ப்பு ஆசிரியர்களான குளச்சல் மு.யூசுப், குறிஞ்சி வேலன், சிற்பி பாலசுப்ரமணியன் ஆகிய மூன்று மொழிபெயர்ப்பாளர்களின், 55 மொழிபெயர்ப்பு நூல்களை மையமாகக் கொண்டு, கேரள சமூகத்தின் இன்றைய சூழலை ஆராய்கிறது இந்நூல்.
வைக்கம் முகம்மது பஷீர், அஜிதா, புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றோரின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப்பின், 25 நூல்கள், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், எம்.டி. வாசுதேவ நாயர், சேது, எஸ்.கே.பெற்றேட்காட் போன்ற சிலரின் நூல்களை மொழிபெயர்த்த குறிஞ்சி வேலனின், 21 நூல்கள்.
ஓ.எஸ்.வி.குரூப், கே.சச்சிதானந்தம், கே.ஜி.சங்கரப்பிள்ளை போன்ற சிலரின் நூல்களை மொழிபெயர்த்த சிற்பி பாலசுப்ரமணியனின், ஒன்பது நூல்களும் தனித்தனியே மதிப்புரை செய்யப்பட்டு, அவர்களுடன் நேர்காணலும் செய்யப்பட்டுள்ளது.
‘பெண்ணியச் சிக்கல், குடிப்பழக்கம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள், விஞ்ஞானத்தின் பிற்போக்குத் தன்மை ஆகியவை, நூற்றுக்கு நூறு கல்வியறிவு பெற்ற கேரளச் சமுதாயத்தில் இன்றும் வேரோடிருப்பது வியப்புக்குள்ளாக்குவதாகவே உள்ளது’ (பக். 263) என்று திறனாய்வாளர் மதிப்பிட்டுள்ளார்.
மலையாள எழுத்தாளர்கள் பற்றிய படங்கள், குறிப்புகள், மொழிபெயர்ப்பு பற்றிய கண்ணோட்டம் யாவும் புதிய கோணத்தில் அணுகப்பட்டுள்ளது. நூலாசிரியரின் வித்தியாசமான திறனாய்வு முயற்சி வரவேற்கத்தக்கது. இலக்கிய வளர்ச்சிக்கு இது போன்ற ஆய்வுகள் அவசியம் தேவை.
– பின்னலூரான்