உலக நாகரிகங்களில் தொன்மையான ஒன்று சிந்துவெளி நாகரிகம். இது, கி.மு., 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். இதைப் பற்றிய கள ஆய்வுகள், கருத்துரைகள் பலரால் தொடர்ந்து ஆராய்ப்பட்டு வந்துள்ளன. சிந்துவெளி நாகரிகம் என்று கருதத்தகும் மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் தொன்மையான நாகரிகம் இருந்ததற்கான அடையாளங்களை இந்நூல் காட்டுகிறது.
இந்தச் சிறிய நூல், அறிமுக அளவில் பல தகவல்களை அளித்துள்ளது. தகவல்களைச் சுருங்க உரைத்திருப்பினும், அதில் காணப் பெறும் செய்திகள் ஆழமானவை. சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு, அது வெளிச்சத்திற்கு வந்தது.
முதற்கட்ட பணிகள், அகழ்வாராய்ச்சிப் பணிகள், சிந்துவெளி எழுத்துக்கள், சிந்துவெளியின் வரலாறு, அதன் வீழ்ச்சி ஆகிய தலைப்புகளில், எளிய நடையில் ஆசிரியர் ஒவ்வொன்றையும் நகர்த்திச் செல்கிறார். சார்லஸ் மசான் என்பவர், முதன் முதலாக ஹரப்பா பற்றிய கருத்துரைகளை வெளியிட்டவர்.
அதன்பின் சிந்துவெளி ஆராய்ச்சி, மேனாட்டினராலும், இந்தியத் தொல்லியல் அறிஞர்களாலும் விரிந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பர்ன்ஸ், கன்னிங்காம், பானர்ஜி, மார்டிமர் வீலர், ஹீராஸ் பாதிரியார், மஜூம்தார் முதலியோர் கருத்துக்களை ஆங்காங்கே எடுத்துக் காட்டியிருப்பது, நூலாசிரியரின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. சிந்துவெளி பற்றி எல்லாரும் அறிந்ததற்கு உரிய கையேடாக இந்நூல் திகழ்கிறது.
– ராம குருநாதன்