முகப்பு » கம்ப்யூட்டர் » கம்ப்யூட்ராலஜி

கம்ப்யூட்ராலஜி

விலைரூ.310

ஆசிரியர் : காம்கேர் கே.புவனேஸ்வரி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மூலை முடுக்குகளில் வாழும் பாமரருக்கும் உலகின் சாளரங்களைத் திறந்து காட்டிய பெருமை கணினிக்கே உரித்தாகும். பூகோளத்தின் எந்த பகுதியையும் இன்று மடியின்மேல் பார்த்து மகிழ முடியும். விண்வெளிக் கோள்களின் இயக்கத்தையும் வீட்டு மேசையில் பார்க்க இயலும். வங்கிக்கணக்குகளை உள்ளங்கையிலேயே பரிவர்த்தனை செய்ய முடியும்.
உள்ளூரையே சரியாக புரியாதோர் மலிந்த காலம் சென்று உலகைப் பெருமளவில் புரிந்து வியக்கும் கிளர்ச்சியான அனுபவங்களை படையலிட்டது கணினி.
கணினியோடு இணைய இணைப்பை ஏற்படுத்தியது மனித இனத்தின் மாபெரும் புரட்சி. ஆறாம் அறிவின் அழகிய அற்புதம். உலகளாவிய வர்த்தகச் சந்தையை வீட்டுக்குள்ளிருந்தே அணுகும் பெரும் விந்தையைச் செய்திருப்பது கணினி. இனி கணினியின்றி எவரும் வாழவே முடியாது என்றாகி விட்டது.
கணினியைப் பற்றி எதுவுமே தெரியாவிட்டாலும் கணினிச் சேவைகளை பல வகையிலும் மறைமுகமாக பெற்றுவரும் பொதுமக்கள் ஒரு வகையினர்.
கணினியின் குறிப்பிட்ட சில செயல்பாடுகளை மட்டுமே பயன்படுத்தி அலுவல்களையும் தொழில்முறைகளையும் நடத்தும்  ஒரு வகையினர்.
கணினித் தொழில் நுட்பமே தமது வாழ்க்கை என்று ராப்பகலாக உழைக்கும் தகவல் தொழில்நுட்பத்தினர் மூன்றாம் வகையினர். உயர் ரக கணினி, பல்வேறு மென்பொருட்கள், இணைய இணைப்பு எனப் பலவற்றை வாங்கிவிட்டாலும், அவற்றை முழுமையாக இயக்கிப் பலன் பெறுபவர்கள் வெகு சிலரே. குறிப்பாக,  முதலிரண்டு வகையினரும் கணினி அறிவில் மேலும் மேம்படவும், பயன் பெறவும்  இந்நூல்  பெரிதும் உதவும்.
வாசிப்புக்காக வரும் புத்தகங்களுக்கிடையே, அன்றாடம் கணினியைப் பயன்படுத்தும் சாமானியர்களுக்கு கணினி தொடர்பான பல தெளிவு களும் தீர்வுகளும் கிடைக்கின்றன. சிறுசிறு அத்தியாயங்களில் படங்களோடு மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வழிமுறைகளை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் புவனேஸ்வரி.
கணினியின் தாய்மொழி, தட்டச்சு  செய்வதை பைனரி முறையில் கணினி புரிந்து கொள்ளும் தகவல், கணினி பிரயோகத்தில் ரகசியக் குறியீட்டைப் பதிவு செய்த பின்னரும் வைரஸ்களிடமிருந்தும், ஒருவரின் அந்தரங்கத் தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்குள் அத்துமீறுதல்களில் இருந்தும்
தப்பிக்க முடியும்.
‘கேப்ட்சா’ குறியீட்டைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் போன்றவை மிக எளிமையான மொழியில் தரப்பட்டுள்ளன.  
இன்றைய அளவில் கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்திருப்பவர் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திருக்கும், ‘யு டியூப்’ காணொளிக்
காட்சிகளை   ஓரிரு சொடுக்குகளில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள். காணொளி காட்சிகளைப் பதிவேற்றம் செய்தல், காணொளி லைப்ரரி உருவாக்கம், இணைய தொடர்பு இல்லாமலே காணொளிப் பதிவுகளைப் பார்க்கும் வசதி.
ஒருவர் தன் கணினியில் இருந்தபடியே உலகின் எந்த மூலையிலும் உள்ள வேறொரு கணினியை இயக்கும் செயல்முறை போன்றவற்றிற்கும் விளக்கம் கிடைக்கிறது. மேலும், வை- பை முதல் சமீபத்திய  லை- பை  போன்ற தொழில்நுட்ப வரவுகள் வரை பல தகவல்களும் தரப்பட்டுள்ளன.   
வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை, ‘பிடிஎப்’ கோப்புகளாக்கும் எளிய முறை, சாதாரண கணினித் திரையை தொடுதிரையாக்கும் வழிமுறை, ஆன்–-லைனில் கூகுள் வரைபடம் உபயோகிக்கும் வசதி, கணினியை குறைந்த காலம் மற்றும் நீண்ட காலம் உறக்க நிலையில் வைக்கும் முறைகள், திறமையை சம்பாத்தியமாக்கும் வலைத்தள விபரங்கள் என பலவும் நூலில் காணக்கிடைக்கின்றன.
யூனிகோட் முறையில் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய உதவும் மென்பொருட்கள், எழுத்துருக்கள்,   லேப் டாப் வாழ்நாளை அதிகரிக்கும் முறை, சைபர் கிரைம் புகார் தரும் முறைகள், நெட் நியூட்ராலிட்டி, மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன், கிளவுட் தொழில்நுட்பம் போன்ற பலவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது.
கணினியில் போதிய பயிற்சி பெறாதவர்களும் நூலில் உள்ள செயல்முறைகளைப் பின்பற்றி கணினியை இயக்கி, பிறர் உதவியின்றி சுலபமாக பல செயல்பாடுகளையும் கற்றுத் தேர்ந்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்நூல் என்பது சிறப்பாகும்.
மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us