தஞ்சை மாவட்டம், திருவாரூரில் விருத்தாசல முதலியார் – சின்னம்மாள் தம்பதிக்கு மகனாக, 1883ம் ஆண்டு துள்ளம் என்னும் சிற்றுாரில் திரு.வி.க., பிறந்தார். யாழ்ப்பாணம் கதிரைவேல் பிள்ளையின் தமிழ் மாணாக்கர். மறைமலையடிகளிடம் இலக்கியமும், மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் சித்தாந்த சாத்திரமும் பயின்றார். வெஸ்லி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
எதற்கும் அஞ்சாத மனம் கொண்டவர் திரு.வி.க., தம்முடைய பொருட்களை யாராவது தொட்டுப் பார்த்தால் கூட கோபம் கொள்ளும் அவர், சம்பந்தப்பட்டவருடன் சண்டைக்கும் போக தயங்காதவர். அதே நேரத்தில் தான் சண்டைக்குச் செல்வது தவறு என்றும், தன் பக்கம் நியாயம் இல்லை என்பதையும் உணர்ந்தால், அந்த சம்பவத்திற்காக வருந்தவும் செய்வார்.
திரு.வி.க.,வின் சொற்பொழிவுகள் எல்லாம், ‘தமிழ்த் தென்றல்’ எனவும், இவரது பத்திரிகைத் தலையங்கம் பலவும், ‘தமிழ்ச்சோலை’ எனவும், இவரது சொற்பொழிவுகள் மேடைத் தமிழ் எனவும், செய்யுள் நூல்கள், ‘அருள் வேட்டல்’ எனவும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. எளிமையும், இனிமையும், சமரச நோக்கமும் கொண்டதால், அனைவரது நெஞ்சிலும் நீங்காத இடம் பெற்றார். தமிழ் உரைநடையில் அருமையும், எளிமையும், புதுமையும்
புகுத்திய பெருமைக்குரியவர்.
சிறந்த தமிழ் ஆசிரியரும், தொழிலாளர் தலைவரும், பத்திரிகை ஆசிரியரும், உயர்ந்த மக்கள் தொண்டரும், அரசியல் தலைவரும், விடுதலை வீரரும் ஆன இவர் தலைசிறந்த தமிழ் அறிஞரும், தமிழ் உரைநடை இலக்கியத்தில் பெரும் புரட்சி செய்தவரும் ஆவார்.
அரசியல் கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தீந்தமிழிலும் தெளிவாக கூற முடியும் என்பதைத் தன் பத்திரிகைகள் மூலம் நிலை நாட்டிய, பெருமகனார் திரு.வி.க., பெருமை கூறும் நல்ல நூல்.
– முனைவர் க.சங்கர்