நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? நேரத்தின் முக்கியத்துவம், நேரத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது, எதிலெல்லாம் நேரத்தைமிச்சம் பிடிக்கக்கூடாது? என, நேரம் குறித்து பல செய்திகளைச் சுவைபட, தனக்கே உரிய எளிய நடையில், 94 சிறு தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார், லேனா தமிழ்வாணன். முதல் தலைப்பில், நாம் நிர்வகிக்க வேண்டிய மூன்று அம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அவை நேரம், பணம், வாழ்க்கைத் துணை. இம்மூன்றையும் நாம் நிர்வகிக்க அறிந்து கொள்ளாவிடில், அவை நம்மை நிர்வகித்துவிடும் என்று கூறி, நேரத்தை நிர்வகிக்கும் கலைக்குள் நுழைகிறார்.
ஒரு குறிக்கோளை அடையவேண்டுமெனில் நீண்டநாள் திட்டமாக அதை வகுத்துக் கொள்ளவேண்டும். நாம் எந்தத்துறையில் ஈடுபட்டுள்ளோமோ, அதற்குத்தான் நேரத்தை அதிகமாக ஒதுக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ளக் கூடாது. மென்மையாக மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறும் ஆசிரியர், நேரம் என்பது ஒரு மூலப்பொருள்.
அதை நன்கு பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டு, வாசகரின் முன், 10 கேள்விகளை முன்வைத்து, அதற்குரிய பதிலைப் பொறுத்து சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். மனிதனின், 25 ஆண்டு காலத்தில் அவன் கல்விக்கென்று செலவழித்தது, எட்டு ஆண்டுகள்.
சும்மா இருப்பது, ஒன்பது ஆண்டுகள். உணவுக்காகச் செலவழிப்பது, இரண்டு ஆண்டுகள். காத்திருப்பதற்கான நேரம், ஒன்பது ஆண்டுகள் என்ற ஆய்வு
முடிவுகளைக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இது மட்டுமன்றி ஆயுள்காலத்தில், 29 ஆண்டு காலம் தூக்கத்திற்காகச் செலவழிக்கிறோம்.
அதில், 26 ஆண்டு காலம் முழுமையான தூக்கமாகவும், மூன்று ஆண்டுகள் கோழித் தூக்கமாகவும் கழிகிறது என்பதும் அவர் கூறும் தகவல்.
கவலைகளை எப்படி வென்று வெளி வருவது? நம்மைச் சுற்றி இருப்பவர்களை எப்படி ஒழுங்கு செய்வது? எல்லா விஷயங்களிலும், தருணம் பார்த்து அணுகினால் ஞாலமும் கைகூடும் என்ற வாதம் அர்த்தமுள்ளது. பல செய்திகளை எடுத்துரைத்துவிட்டு, இறுதியாக, நாம் இந்தக் கணத்தில் லயித்து வாழ்வதே சிறந்தது என்று கூறி, எதையும் கடைசி நிமிடத்தில் வைத்துக் கொள்ளாது வாழ்வதே சிறந்தது என்ற தகவலும் உள்ளது.
ஒருநாளின், 24 மணி நேரத்தை உற்பத்திப் பொருளாக மாற்றி, மூலப்பொருளாக்கி அதைச் சரிவர பயன்படுத்துவதை இந்த நூல் காட்டுகிறது.
–பன்னிருகை வடிவேலன்