முற்றிலும் தனது நடையில் வார்ப்புரை என்ற வகையில், ஆசிரியர் குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். எளிய முறையில் மக்களுக்கு குறள் சென்றடைய விரும்பிய வேள்வி தன் மனதில் உதித்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அதைவிட இந்த எளிய உரை உருவாக தன் மனைவி செல்வி ஒத்துழைத்ததை குறிப்பிட்டிருப்பது சிறப்பு.
பாவேந்தர் பாரதிதாசன் நடந்த பாதையில், எளிய முறையில் உரை அமைத்திருப்பதால், தமிழ் அறிந்த அனைவரும் இதைப் படிப்பது எளிது.
‘ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை, மாற்றுவார் ஆற்றலின் பின்’ என்ற குறளுக்கு பொதுவாக, ‘பிறர் பசியை தீர்க்கும் ஈகையே, தவத்தின் வலிமையை விடவும் பெரியது’ என்பது பொருள். அது வார்ப்புரையில், ‘தவ வலிமை கொண்டவரின் மிகப்பெரும் வலிமை பசி தாங்குவதே; அந்த பசியை தீர்ப்பவனின் வலிமைக்கும் அது பிற்பட்டதே!’ என்று விளக்குகிறார்.
எளிய புதுக்கவிதை பாணியில் குறளை விளக்கும் ஆசிரியர், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களுக்கும் வார்ப்புரை எழுதியவர். வங்கிப் பணியில் உயர் பதவி வகிக்கும் இவரது தமிழார்வம் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட வைத்திருக்கிறது என்பதும், திருக்குறளுக்கு எளிய உரை ஒன்று கிடைத்திருப்பதும் சிறப்பாகும்.