வேண்டிய பக்தர்களுக்கு நல்லன எல்லாம் தரும் வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமியின் அழகிய வண்ண ஓவியம், அட்டையை அலங்கரிக்கிறது. பல்வேறு புதுமை, நவீனத்துவம் மற்றும் பெண் பெருமை என்று, பல்வேறு கருத்துகளை கொண்டது இந்த மலர்.
முருகனை அடைய, அவர் வாகனமான மயில் உதவும் என்பதை கூறினார், பாம்பன் சுவாமிகள். சக்தி மயில் போன்ற பெயர்களை கேள்விப்பட்ட பலரும், அவுஷத மயில், அசுர மயில், வேத மயில் என்ற பல தகவல்களை, ‘அழகன் முருகனுக்கு அழகழகான மயூரங்கள்’ என்ற கட்டுரையில், வண்ணப்படத்துடன் காணலாம்.
பயிர்களை மட்டும் அல்ல... மனிதர்களுக்கு மாமருந்து, ‘பஞ்சகவ்யா’ என்ற கட்டுரையில் உள்ள தகவல்களை, மருத்துவ அறிஞர்கள் பார்த்து, அதன் விஞ்ஞானப் பூர்வ தன்மையை அறிவிக்கும் காலம் வந்தால் நல்லது.
மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு தன் பேட்டியில், ‘கம்யூனிச கருத்துக்கள் செல்வாக்கை இழக்கிறதா, தேர்தல் தோல்வி பாதிக்குமா?’ என்ற கேள்விகளுக்கு அவர் விடையளித்த விதம், அவரது நேர்மையை பறை சாற்றுகின்றன. சுற்றுலா சூழலில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க்கை ரசிக்கலாம்.
எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் வண்ணதாசன் உட்பட பலரது சிறுகதைகள், ஆசைகள் என்னும் தாயக்கட்டை உருட்டுவதைப் போல, காதல் உருட்டும் விதத்தை, கவிஞர் யுக பாரதி கவிதை காட்டுகிறது. மற்றோர் தெய்வம் வந்திப்பது எப்படி என்ற அபிராமி பட்டர் பாட்டிற்கு இணங்க, ஸ்ரீமீனாட்சி அம்மன் வண்ணப்படம், அஞ்சிலே ஒன்று பெற்ற அனுமன் படம், மற்ற கடவுளர் படங்கள், தீபாவளி மலருக்கு எழில் சேர்க்கின்றன.
சினிமாவும், புதுமைக்கருத்துக்களும் இல்லாத மலர் ரசிக்குமா?
அத்தனையும் கொண்டிருக்கும் வண்ண தீபாவளி மலராக உருவாகி உள்ளது.