மனிதர்கள் நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு இன்னும் உலகில் மானுடவியலாளர்கள் விடை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
அறிவியலில் ஆயிரம் பிரிவுகள் முயன்ற போதும், கடலின் மடியில் மறைந்து கிடக்கும் செல்வங்களை மதிப்பிட முடியாததைப் போல், வானிலும், மண்ணிலும் இன்னும் அறியப்படாத ரகசியங்கள் பொதிந்திருப்பதைப் போல, ஆன்மாவும் இருக்கிறது. அது தன்னுள் பல சக்திகளை தேக்கி வைத்திருக்கிறது, உண்மைகளை அடுக்கி வைத்திருக்கிறது என்று உதாரணங்களுடன் எடுத்துச் சொல்கிறார் நுாலாசிரியர்.
தன் நிலைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக, மனோ சக்தியில் துவங்கி, உடல், உயிர், தன்னை அறிதல், ஆத்மா, ஆதார சக்தி, ஆன்ம நோக்கு, பயணம் என்று, 35 தலைப்புகளில் நிலைநிறுத்துகிறார்.
‘விதை கண்ணுக்குத் தெரியும், விதைக்குள் இருக்கும் மரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. விதை மரமாகிறது. மரம் விதையாகிறது. இடையில் நிகழ்வதோ மாறுதல், மறுசுழற்சி. இந்த உலகத்திற்கு ஒவ்வொருவரும் வந்து போவதும் இப்படித்தான்‘ என்று பேசுகிறது புத்தகம்.
‘இந்த உயிர் அழியுமா? அழியாதா? மரணத்திற்குப் பின் மனிதர்கள் எங்கே போவர்? புத்தர் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லமாட்டார். சிரிப்பார், இன்றையகதையைக் கேளுங்கள் என்றபடி, ‘வடிவங்கள் வேறுபடலாம், வாழ்க்கை மாறுபடலாம், ஆனால், அடிப்படையில் எல்லாமே ஒன்றுதான். உள்ளே இறைவன் இருக்கிறார் ஆத்மாவாக என்பார்‘ என்ற கருத்து நிறையவே யோசிக்க வைக்கின்றன.
எவ்வளவு கிடைத்தாலும் மனம் திருப்தியடையாது. காரணம், ஆத்மா பொருள்களில் திருப்தியடைவதில்லை. எங்கிருந்து வந்ததோ அங்கே சென்று சேர்வது தான் ஆத்மாவின் பயணம்.
ஆத்மா பற்றி அறிந்து கொண்டு ஞானியாவதும், புரிந்து கொண்டு யோகியாவதும் அவரவர் ஆன்ம சக்தியால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்றல்லவா? என்பதை வலியுறுத்தும் புத்தகம்.
–ஸ்ரீநிவாஸ் பிரபு