குரு பக்தி மற்றும் குரு – சிஷ்ய உறவின் அருமை, பெருமைகளை உணர்த்தும் நுாலாக இந்நுால் அமைந்துள்ளது.
கூரேசர் என்று அழைக்கப்படும், ஸ்ரீ கூரத்தாழ்வாரின் வாழ்க்கையும், அவருடன் இணைந்து வாழ்க்கைப் பயணம் செய்த, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையும், இந்நுாலில் இரண்டறக் கலந்து விவரிக்கப்பட்டுள்ள அழகு பெரிதும் பாராட்டுதற்குரியது.
டாக்டர் பி.கே.வாசுதேவன் எழுதிய ஆங்கில நுாலின் தமிழாக்கமாக இந்நுால் வெளிவந்துள்ள போதிலும், முதல் நுால் போன்ற அழகிய தெளிவான நடையில் இருப்பது, படிப்போருக்கு மிக்க இன்பம் தரும் எனலாம்.
திருக்கோஷ்டியூர், நம்பியின் பிடிவாதம் குறித்து விளக்குவதும் (பக்., 166) திருவரங்கத்தமுதனாரிடம், ‘ச விஜ ஸ்ரீரங்கம் பெரிய கோவில் சாவியை, கூரேசர் பெற்ற விதத்தை விவரிப்பதும் (பக்., 172), ‘பஞ்ச நாராயணா’ என்று அழைக்கப்படும் கோவில்கள் அமைந்துள்ள இடங்களைக் கூறுவதும் (பக்., 266), கூரேசர் பரம பதம் எழுந்தருளும் செய்திகளை மிக நயமாக, உணர்ச்சிகரமாக விளக்குவதும் நுாலாசிரியரின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
நுாலின் பிற்சேர்க்கையாக உள்ள அரும்பதவுரையும், ஆச்சார்யர்களின் தமிழ் பெயர்களுக்குச் சரியான வடமொழியில் பெயர்களும் கொடுத்துள்ளது அனைவருக்கும் மிகவும் பயன்படும் எனக் கூறலாம்.
நுாலின் இறுதியில் உள்ள புகைப்படங்கள் மிக அருமை. மறைந்த நீதிபதி, என்.கிருஷ்ணசாமி ரெட்டியாரின் அணிந்துரையும் (ஆங்கிலம் பதிப்பின் தமிழாக்கம்) டி.என்.மனோகரன் (சேர்மன், கனரா வங்கி) அணிந்துரையும், ஸ்ரீமத் அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயரின் வாழ்த்துரையும் இந்நுாலிற்கு பெருமை சேர்க்கின்றன.
– பேரா., டாக்டர் கலியன் சம்பத்து