அமெரிக்க கலிபோர்னியாவில், 1927ல் பிறந்து, பாலே நடனக் கலைஞராய் பரிமளித்து, இந்து மத ஈடுபாட்டால், 1949ல் யாழ்ப்பாண ஞானியார், யோக சுவாமிகளால் சன்னியாச தீட்சை பெற்று, பிரதான பாடம் எனும் மூன்று தொகுப்புகளால் ஆங்கிலத்தில் வெளியான, நுாலின் முதல் பாகமான, ‘DANCING WITH SIVA’ தற்போது தமிழ் வடிவம் பெற்றுள்ளது.
‘மனம் முழுக்க காழ்ப்பினை சுமந்து செல்லும் தியான முயற்சிகளில் பலன் மிகக் குறைவு’ (பக்., 45ல்) எனும் அடிப்படையில் செல்லும் இந்நுாலில், 155 ஸ்லோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
‘கடவுளிடமிருந்து வந்து மீண்டும் கடவுளிடமே செல்லும் மனிதனின் படிப்படியான பரிணாம வளர்ச்சியை விவரித்துக் காட்டும் சைவம். ஞானியர் வடிவமைத்த ஞான மார்க்கங்களையும், சத்தியப் பாதையாய் காண்பது சைவ நெறி’ (பக்., 74) எனும் இந்நுால், ஒவ்வொரு அசைவும் இறைவன் திருநடனமே என்று நிறுவுகிறது.
சனாதன தர்மம், கடவுளும், கடவுள்களும், அழியாத ஆன்மா, உலகம் சிவமயம், தர்மம், குடும்ப வாழ்க்கை, புனித கலாசாரம், புனித வழிபாடு, மஹாத்மா, புனித நுால்கள், தவவழி, சம்பிரதாயம் என, 12 உபநிடதங்களாய், மூன்று மண்டலங்களில் விளக்கப்பட்டுள்ளது.
‘குருவின் திருவாய் வழி சொல்லித் தரப்படும் மந்திரமே சக்தி வாய்ந்தது’ (பக்., 578), ‘சிவபெருமானே கருணையெனும் அருட்பெருஞ்சோதி, ஆழ்மனதின் சத்தியம் (பக்., 580), வேதாந்தம் மற்றும் சித்தாந்தம் ஆகிய இரண்டையும் அரவணைத்துச் செல்வதே சைவ சித்தாந்தம், (பக்., 604).
ஞானமடைந்தவன் தன் பெயர் வடிவம் ஆகிய அனைத்திலிருந்தும் விடுபட்டுத் தெரிந்தவன், அனைத்திலும் உணர்ந்த ஆதார ஆன்மாவை எய்தி விடுகிறான் (பக்., 616).
இப்படி ஏராளமானவை அடங்கிய பொக்கிஷம். ஓர் ஆங்கிலேயர் இவ்வளவு அற்புதமாக, வேதசாரத்தை, சைவ நெறியை, சிவனின் திருநடனத்தை உலகியலோடு இயைந்து படைத்துள்ள இந்நுால் படிக்க வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய அற்புத நுாலாகும்.
–பின்னலுாரான்