கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை.
பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும்.
சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், இதுதான் சிறுகதையின் முடிந்த முடிவான இலக்கண அமைப்பு என்று எவரும் இன்று வரை வரையறுத்துக் கூறவில்லை.
இருப்பினும் சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று சிறுவர் கதைக்களஞ்சியம் எனும் இந்நுால் மிக நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளது.
இந்நுாலில் மாற்றுத் திறனாளி விஞ்ஞானி எனும் சிறுகதையில், ‘நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்’ என்று கேட்டான், சிவா. அதற்கு, கருணானந்தம் எனும் மாற்றுத்திறனாளி, ‘விஞ்ஞானி ஆகணும்ன்னு ஆசைப்படுறேன்’ என்று பதிக்கப்பட்டிருப்பது, உள்ளபடியே ஆரோக்கியமாக வாழும் அனைவரையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது.
செல்லாக்காசு என்னும் சிறுகதையில், ‘அண்ணா உங்களிடம் அன்று கூறியது போல அந்தச் செல்லாக் காசுகளை எப்படியாவது செல்ல வைக்க வேண்டும் என்ற எழுச்சி, வைராக்கியம், கனவு எனக்குள் எழுந்தது’ என்னும் வரிகள் ஆசிரியரைப் போலவே, சாதிக்கத் துடிக்கும் இளைய சமுதாயத்திற்கு நல்ல உபதேச சொல்லாகும்.
இந்நுாலில் படைக்கப்பட்டிருக்கிற, 50 சிறுகதைகளும் சிறப்பானது என்பதற்கு சாகித்ய அகாடமி பதிப்பே அதற்கு சாட்சி. அனைத்து சிறுகதை ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
– முனைவர் க.சங்கர்