தமிழவன் படைப்புகள் பொதுவாக, நவீனத்துவம் சார்ந்தனவாய் அமைவன. மேனாட்டு இலக்கிய உத்திகளை அறிந்து வைத்திருக்கிற அவர், தாம் படைக்கும் படைப்புகளில், அத்தகைய உத்திகளை அறிமுகப்படுத்துவதில், ஆர்வம் கொண்டிருப்பவர்.
பின் நவீனத்துவ வாசிப்பினுாடே, புதிய பரிமாணங்களில் நவீனத்தை மையப்படுத்தி, எழுதி வரும் அவர், பரிசோதனை முயற்சியாகப் படைப்பிலக்கியம் அமைய வேண்டும் என்ற, எதிர்பார்ப்பைத் தம் படைப்புகள் ஒவ்வொன்றிலும் பதிவு செய்து வருபவர். அந்த வகையில், ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவலும் அமைந்திருக்கிறது.
குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள உவமைகளுள் ஒன்றான, ‘ஆடிப்பாவை போல’ என்ற தொடர் நாவலுக்குரிய தலைப்பாக அமைந்துள்ளது.
இந்த நாவலை வாசிக்கும் முறை பற்றிக் குறிப்பிடும்போது, இதை மூன்று வகையாக வாசிக்கலாம் என்கிறார்.
அதாவது, அத்தியாயங்களை ஒற்றைப் படையில் (1, 3, 5, 7) வாசிப்பது, இரட்டை எண்களிலான (2, 4, 6, 8) அத்தியாயங்களைத் தொடர்ந்து வாசிப்பது, இவை இரண்டும் அல்லாது ஒன்று முதல் பத்தொன்பது, அத்தியாயங்கள் வரை தொடர்ச்சியான வாசிப்பு என்ற முறையில் நுாலை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு வகையில் இரு வேறு கதைகளைக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. ஒரு பகுதி காதற் கதையாகவும், மற்றொரு பகுதி மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டமாகவும் மாற்றுக் காட்சிகளிலான கதைப் பின்னலால் நகர்கிறது.
நாவலில் பொதுவாகக் காணப்படும் துணைப்பின்னல் போன்றில்லாமல் தனித்தனியாக அகம், புறம் என்று விவரித்துச் சொல்லப்பட்டுள்ளது.
அறுபதுகளின் இறுதியில் திராவிட அரசியலில் பங்கு கொண்டு கழகப் பேச்சாளராக விளங்கிய கல்லுாரி இளைஞர்களின் வாழ்க்கை அனுபவமும் ஆங்காங்கே தலை துாக்குகிறது.
காதல் அக வடிவமாகவும், திராவிட அரசியல் (குறிப்பாக, இந்திப் போராட்டமும், அதன் பின் நிகழும் நிகழ்வுகளும்) புற வடிவமாகவும் காட்டப்பட்டுள்ளது.
நாவலில், இவை ஒன்றுக்கொன்று முரணாகா வகையில் இயங்குகிறது. இந்திய நாட்டின் தலைநகர் வரை நீண்டு சென்று கதை முடிவுறுகிறது. கதை மரபு ரீதியாகவே நகர்கிறது.
பாத்திரங்களின் வார்ப்பில் காந்திமதி – வின்சென்ட் காதலும், கிருபாநிதி – ஹெலன் காதலும் சரி சமமாகப் பயணிக்கும் இந்நாவலினுாடே காதலும், திராவிட அரசியலும் அடுத்தடுத்துச் சொல்லப்படுகிறது.
போராட்டத்தில் களம் இறங்கும் ஜி.கே.சாமி, அமரன், நெல்சன், பொன்வண்ணன், சந்தோஷ், வான்மீகநாதன், அரங்கநாதன், ஜோசப், ஒற்றைக்கண் சுரேந்திரன் ஆகியோர் ஒன்றுபட்டும், கருத்து வேறுபாடு கொண்டும் செயற்படுவதை ஆசிரியர் சித்தரிக்கிறார்.
இந்திப் போராட்ட உணர்வுகள் திராவிட இயக்கத்தில் எத்தகைய உணர்வை விதைத்துள்ளன என்பதைப் பட்டும் படாமலும் உணர்த்துகிறார்.
இந்தப் பின்னணியை, திராவிட ஆட்சி மாற்றத்தின் ஆணி வேரை இன்னும் ஆழமாக உணர்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
காதற்கதையாக நீளும் காந்திமதியின் குடும்பக் கதை, கிருபாநிதியின் குடும்பக் கதை ஆகியவை தனிப்பாதையில் நகர்ந்து செல்கின்றன. இளங்காதலர்கள் கதை ஒருபுறம் நீண்டதாகச் சொல்லப்பட்டுள்ளன.
சில நிகழ்வுகள், குறிப்பாக, சந்தோஷ் எரித்துக் கொல்லப்பட்டமை, விடுதி சமையற்காரர் பட்டர் மகன் பற்றிய தகவல், கம்யூனிஸ்ட் காம்ரேட் சட்டர்ஜி, சுப்பிரமணியன், எம்.எஸ்.ராவ், அருண், சுபாஷ்ராஜ் ஆகியோரின் பங்களிப்பு முதலியவை கதையை விரித்துச் செல்வதற்குப் பயன்பட்டிருக்கிறது.
பாத்திர வார்ப்பில் மேலோட்டமான சிந்தனைகளை விதைத்திருக்கிறார். டில்லியைப் பின்னணியாகக் கொண்டு நகரும் இறுதியான அத்தியாயங்களில் பதவி அரசியல் சற்றே துாக்கலாக உரையாடல்கள் வழி உணர்த்தப்பட்டிருக்கிறது.
வின்சென்ட், காந்திமதி இவ்விருவரும் வயதான நிலையிலும் தங்கள் காதலை மறவாமல் இருப்பதையும், நவ நாகரிக மோகத்திற்கு இடம் கொடுத்திருப்பதையும் அவர்களின் அகப்புற வாழ்க்கையில் காண்கிறோம்.
கதை சொல்லுதலில், இந்த நாவல் ஒரு புதிய முயற்சியை நோக்கி நகர்வதாகவே தோற்றம் தருகிறது.
– ராம.குருநாதன்