அண்மையில், நடைபெற்ற காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நுால், காவிரியின் பெருமையைப் புராண, வரலாற்றுச் சான்றுகளோடு மேற்கோள் பாடல்களுடன் விரிவாகப் படைக்கப்பட்டுள்ளது.
குரு பகவான், 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நதியில் புஷ்கர மேளா தீர்த்தவாரி நிகழ்வது பற்றி குறிப்பிடுகையில், 12 ராசிகளிலும் குரு இருக்கும்போது ஒவ்வொரு புண்ணிய நதியில் புஷ்கரம் உருவாக ஏற்பாடாகி, அதன்படி குரு மேஷத்தில் இருக்கும்போது கங்கைக்கு விசேஷம்.
ரிஷபத்தில் நர்மதை, மிதுனத்தில் சரஸ்வதி, கடகத்தில் யமுனை, சிம்மத்தில் கோதாவரி, கன்னியில் கிருஷ்ணா, துலாத்தில் காவிரி, விருச்சிகத்தில் தாமிரபரணி, தனுசில் சிந்து, மகரத்தில் துங்கபத்திரா.
கும்பத்தில் பிரம்மபுத்திரா, மீனத்தில் பிரணீதா என்னும் நதிகள் விசேஷம் பெறுகின்றன (பக்.76) என்னும் நுாலாசிரியர், காவிரி புஷ்கரம் பற்றிய காரணங்களை விளக்கி, நீராடும் முறைகளை சுருக்கமாகத் தந்துள்ளார்.
காவிரி என்பது தமிழ்ச் சொல், காவேரி என்பது வடசொல் (பக்.10), அகத்தியரின் மனைவி, உலோபா முத்திரையே காவிரியான கதை, தடைபட்ட காவிரி, தாயாகி, பின், ‘கழுத்தில் விழுந்த மாலை’யை மன்னனிடமிருந்து, சிவனிடம் சேர்த்த கதை, பெரியபுராணத்தில் குறிப்புகள்.
காவிரிக் கரையில் உள்ள சிவத்தலங்கள், பெருமாள் கோவில்கள் பற்றியும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
‘அலையார் புனல் வரு காவிரி, மன்னுகாவிரிசூழ் திருவலஞ்சுழ, அம்பொன் நேர் வரு காவிரி’ என்று ஞானசம்பந்தரும், ‘கொழித்தோடும் காவிரிப் பூம் பாவை யாய்’ என அப்பரும், ‘சுழல் நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே’ என சுந்தரரும் பாடிய பாடல்களும், திவ்வியப் பிரபந்தத்தில் ஆழ்வார்கள் பாடிய பாடல்களும் பெரும் முயற்சியோடு இதில் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்து வந்த புஷ்கரம், 2017ன் மகா புஷ்கரம் அல்ல (பக்.78) என்பதையும் ஆதாரத்தோடு நிறுவியுள்ள ஆசிரியர், 1900ல் பதிப்பிக்கப்பட்ட துலாகாவேரி மகாத்மியம் பதிப்பின் முகப்பை (பக்.57) வெளியிட்டு அவரது ஆய்வறிவை, அனுபவ முத்திரையைப் பதித்துள்ளார்.
காவிரி பற்றிய ஆய்வாளருக்கும், ஸ்நான விதிகளை அறிந்து கொள்ள விழைவோருக்கும் பயன்படக்கூடிய அருமையான நுால்.
– பின்னலுாரான்