முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருத்தலங்கள் மட்டுமல்லாது, பிற தெய்வங்கள் மீது அருணகிரிநாதர் பாடிய திருத்தலங்களைப் பற்றியுமான இந்நுால் ஒரு முழுமையான வரலாற்று நுாலாகத் திகழ்கிறது. 49 திருத்தலங்களைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார் நுாலாசிரியர்.
ஒவ்வொரு திருத்தலத்தின் பெயர்க் காரணம், அங்கு நிகழ்வுற்ற புராண நிகழ்வு, அத்திருத்தலத்தில் குடி கொண்டுள்ள இறைவன், இறைவி, ஏனைய தெய்வங்கள் என அத்தனையும் மொத்தமாக நுாலுள் தொகுத்து வழங்கியுள்ளார்.
பழநி – திருஆவினன்குடி எனப் பெயர் பெற்றதன் வரலாற்றை (திரு+ஆ+இனன்+கு+டி) திரு – திருமால், ஆ–காமதேனு, இனன் – சூரியன், கு–பூமி, டி–அக்னி ஆகியோர் பூஜித்த திருத்தலமே திருஆவினன்குடி.
நாவல் மரத்தடி லிங்கத்தை ஒரு யானை வந்து பூஜை செய்ததால், ‘திருவானைக்கா’ என்ற பெயர் வந்ததையும் நீர் வடிவாக காட்சி தருவதால், அப்புலிங்கம் எனப் பெயர் எழுந்த வரலாற்றையும் விரிவுபட விளக்கியுள்ளார்.
முருகன் ஆறுமுகங்களைக் கொண்டதன் உண்மை சிந்தித்ததற்குரியது எனக் கூறும் நுாலாசிரியர், சிவத்துக்குரிய தற்புருவம், அகோரம், வாமதேவம், சக்தியோசாதம், ஈசானம் என்ற முகங்கள் ஐந்துடன், சிவசக்தியின் ‘அதோமுகம்’ என்னும் கீழ்நோக்கிய முகம் ஒன்றுமாக ஆறு.
திருமுகங்கள் கொண்டு, முருகன் சிவ சொரூபமாகவும் சக்தி சொரூபமாகவும் விளங்குவதாகக் கூறுகிறார். இலங்கையில் அமைந்துள்ள கதிர்காமம் முருகன் கோவில் பற்றி விரிவாக விளக்குகிறது இந்த நுால்.
சிவபெருமானை வழிபட தேவாரப் பாடல்களும், திருமாலை வழிபட ஆழ்வார் பாடல்களும் உள்ளது போல், முருகனின் திருத்தலங்களைக் கண்டு வணங்க நமக்கு வழிகாட்டியாக இருப்பது, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களே!
– புலவர் சு.மதியழகன்