தமிழகத்தின் முன்னணி நாளிதழ் தினத்தந்தியின் 75 ஆண்டுகள் நடத்திய இனிய பயணத்தை வரலாற்று ஆவணமாக காட்டியிருக்கிறது இந்த மலர். இதற்கான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசிய போது, ஊடகத்தின் சிறப்புகளை வெளியிட்டதையும் தமிழக மக்கள் மறக்கமுடியாது.
‘பசி நோக்கார்: கண்துஞ்சார்’ என்ற கருத்தில், தொழில் நுட்பம் அறிந்த சி.பா.ஆதித்தனார் இதை ஆரம்ப காலத்தில் வளர்த்தவிதம் சிறப்பானது.
பத்தாயிரம் பிரதி அச்சிட்டதை வளர்ச்சி என்று கருதிய காலம் மாறி, இன்று அது இமாலய வளர்ச்சி
கண்டிருப்பது கண்கூடு. அடுத்ததாக, சிவந்தி ஆதித்தன் அவர்களது தலைமையில், 17 பதிப்புகள் கொண்ட நாளேடு என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
கல்கி ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தியும், சி.பா.ஆதித்தனாரும் ஒரே பாதையில் பயணம் செய்த தகவல், நாளிதழின் வெள்ளி விழா மலரில் அன்றைய முதல்வர் அண்ணாதுரை எழுதிய குறுநாவல் இடம் பெற்றுள்ளது.
பள்ளியில் படித்த காலத்தில் ஜெயலலிதா இந்த நாளிதழை வகுப்பறையில் இருந்தபடி, துணுக்குகளை ரகசியமாகப் படித்த விதம், நடிகர் ஜெமினி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோரின் ரகசியத் திருமணம், புதுமனை புகுந்த தகவலை வெளியிட்டதை,
சாவித்திரி தெரிவித்து மகிழ்ந்தது எனப் பல அம்சங்கள் சுவையாக நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
நாளிதழின், 75 ஆண்டு கால வளர்ச்சியில் பங்கேற்ற, சிறப்பு ஊழியர்களின் கருத்துக்கள், நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை வரிசையாக வெளியிட்ட பாங்கு ஆகியவை, இளைய தலைமுறையினர் படிக்கும் வகையில், வசதியாக தரப்பட்டிருக்கிறது.
அதை விட, முந்தைய நாளிதழ் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்தவற்றை அக்காலங்களில், வெளியிடப்பட்ட அச்சக முறையில், அப்படியே பக்கம் பக்கமாக வெளியிட்டுள்ள விதம், நாளிதழின் வளர்ச்சியைப் படம்பிடிக்கிறது.
தமிழின் வளர்ச்சி, தமிழரின் நலம், தமிழகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டு பாடுபடும் நாளிதழ், இந்த லட்சியத்தில் வாசகர்கள் துணையோடு வெற்றி பெறும் என்று இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் குறிப்பிட்டிருப்பதை இம்மலர் அப்படியே எடுத்துக்காட்டுகிறது.
தமிழ் முன்னணி நாளிதழின் வளர்ச்சியைக் காட்டும் சிறந்த மலர் இது.
–பாண்டியன்