வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார்.
அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார்.
ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் அருகில் நிற்கிறார்.
‘512 Likes... 117 Comments... 39 Shares...’ என்கிற கதை முழுக்க முழுக்க பேஸ்புக் பதிவே! அந்தப் பதிவுக்கு வரும் கருத்துகளை வைத்தே கதை சொல்ல முடியுமென்று புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார்.
அதுபோல, ‘செய்திகள்’ என்று இன்னொரு கதை. தலைப்புச் செய்திகளை ஒட்டியே கதை வருகிறது. காலம் மாறினாலும் வாசகர்கள் புதுமையை விரும்புவது மாறாது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஆசிரியர், புதிய கதைசொல்லல் முறையைக் கையாண்டு நமக்கும் அறிமுகப்படுத்துகிறார்.
கதையின் தலைப்புகளிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ‘நியூட்டன் விதி, முதலாம் காதல் யுத்தம், புத்தி யுத்தம், ஹலோ, நண்பா!, கிச்சா என்றொரு ஹீரோ, இளவரசி பராக் பராக்’ போன்ற தலைப்புகள் இந்தத் தொகுப்பில் ரசிக்கப்படுபவை.
கற்பனையாக இருந்தாலும் கதையில் ஒரு புள்ளி அளவிலாவது நிஜம் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும். அவ்வாறு ரசனை தராத கதைகளும் இதில் இருக்கின்றன. எல்லாம் நன்றாக அமைந்திருந்தாலும் தொகுப்பில் இருக்கும் எழுத்துப் பிழைகளும், சொற் பிழைகளும் எரிச்சலைத் தருகின்றன.
முன்னுரையிலேயே பிழைகள் அதிகம் இருப்பதால், வரப்போகும் கதைகள் மீது அச்சம் ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து மறுபதிப்பில் திருத்தம் செய்தால், நிச்சயமாக வாசகர்களின் கனவில் கடவுள் வரலாம்.
–மனோ