உலகில் எந்த உயிரும் மனதின் ஆதிக்கத்தில்தான் இயங்குகிறது. மனம் சொன்னால் உடல் சிரிக்க வேண்டும்; மனம் வருந்தினால் அழ வேண்டும்; அதிர வேண்டும்; இப்படி ஒவ்வொரு நகர்வுமே மனதின் கட்டளைப்படியே நடக்கிறது.
சஞ்சலத்தில் உழலும் இந்த மனதைச் சமன்படுத்திப் பண்படுத்த பலப்பலவாக ஆன்மிகம், தத்துவம், உளவியல் சார்ந்த நுால்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவற்றுக்கிடையே பலவகையிலும் வேறுபடும் நுால்களில் ஒன்று.
ஒருவருக்கு நன்மை தரும் ஒன்று, இன்னொருவருக்கு இழப்பாக இருக்கிறது. ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும் ஒரு நன்மை உண்டு. கேடும் உண்டு.
ஆனாலும் நன்மையின் மிகுதிக்காக நாம் ஒன்றை பராமரிக்கிறோம். தீமையின் மிகுதிக்காக ஒன்றை புறக்கணிக்கிறோம்.
ஒரு உயிருள்ள பொருளால் நன்மை உண்டு என எண்ணிக்கொண்டிருக்க, அதனால் உள்ள தீமையும் மனிதனால் உணரப்படுகிறது. இதுவே உலக நியதி.
இந்த கோட்பாட்டின் அடிப்படையில் மனித மனத்தின் மாச்சரியங்களும், மனப்பாங்குகளும் நுால்நெடுக முன்வைக்கப்படுகின்றன.
அவற்றினுாடே, தன் தத்துவார்த்தக் கருத்துக்களையும், திருக்குறள், திருமந்திர மேற்கோள்களோடு விளக்கி, மாறிவரும் பண்பாட்டுச் சிந்தனைகளையும், மெய்யியல் கூறுகளையும் விளக்க முற்படுகிறார் நுாலாசிரியர் .
உலகில் ஒவ்வொரு செயலும் ஒரு தனிப்பட்டவரால் நடப்பதில்லை. எந்த ஒரு வெற்றியும் தனிப்பட்ட ஒருவருக்கு உரியதல்ல. எந்த முயற்சியும் பலராலும், பல்வேறு சாதனங்களால் வினையாக்கப்பட்டு முடிகின்றன.
ஒவ்வொரு செயலின் வெற்றியிலும், தோல்வியிலும் பலரின் பங்கு உள்ளது. பல வகையான சிந்தனை மாறுபாடுகளும், நம்பிக்கைகளும், இன்ப துன்பங்களும் மனிதனை மேலும் கீழும் தொடர்ந்து இயக்குகின்றன என்பதைக் கூறி, அவற்றுக்கான காரணிகளையும், உந்துதல்களையும் தக்க மேற்கோள்களோடு விவரிக்கிறார்.
ஒரு மனிதன் எவ்வகையான சிந்தனையால், தத்துவக்கூறுகளால் பிறரிடமிருந்து மாறுபடுகிறான் என்பதையும் விளக்குகிறார். உள்ளத்தைச் சீர்படுத்தும் கருத்துகள் அனைத்தும் அறநெறியில் வந்துவிடுகின்றன. அறம் சார்ந்த, மனம் சார்ந்த தத்துவங்கள் பலவும் எளிதில் புரிந்துணரும் வகையில் நுாலில் விளக்கப்பட்டுள்ளது.
தன்னை காத்துக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தப்பட வேண்டிய உண்மைகள் பல்வேறு பக்கங்களில் பகிரப்பட்டுள்ளன.
பகுப்பாய்வுச் சிந்தனைகளோடு நகர்ந்து செல்லும் நுாலுக்குள், இடையிடையே பல்வேறு பொருளியல் சார்ந்த கருத்துகளும் அங்கங்கே விரவி உள்ளன.
உதாரணமாக, வெற்று ஆரவாரங்களும், ஆடம்பரங்களும் உள்ள அரசாங்கத்தால் கிட்டும் நன்மைகள் குறைவாகவே இருக்கும்; எந்தவொரு போற்றுதலுக்கும் பின்னால் ஜாதி, மதம், குழு, உறவு போன்ற சார்புகள் பெரிதும் மேலோங்கி நிற்கின்றன.
பொன்மொழிகளும், அறிவுரைகளும் அவற்றைச் சொல்பவரின் தகுதிக்கேற்பவே, நம்பகத்தன்மைக்கேற்பவே ஏற்கப்படுகின்றன.
பாசிச கொள்கைகள் கொண்டவர்களின் கண்துடைப்புச் செயல்களால் மக்கள் அவதிகளில் இருந்து விடுபடுவதில்லை போன்ற கருத்துக்கள் சிந்தனைக்குரியவை.
வலிமையானதே இவ்வுலகில் வெல்லுகிறது என்பதை விரிவாக விளக்கும் நுாலாசிரியர், வல்லமைக்கு ஏற்பவே வெற்றி அமைகிறது என்று கூறி மனித வல்லமைகளின் பட்டியலையும் தந்திருப்பது, வாசிப்பில் பல புரிதல்களை ஏற்படுத்தும்.
கடவுள் பற்றிய விரிவான தத்துவார்த்தங்களோடு, இப்பிறவியில் ஏற்படும் முற்பிறவியின் தாக்கம், பேரண்டத்தின் அமைப்பு, தொடக்கம் மற்றும் இயக்கம் போன்றவற்றிற்கும் நுாலாசிரியரின் மாறுபட்ட அணுகுமுறையோடு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
ஆங்காங்கே தலைப்புக்கேற்ப தரப்பட்டிருக்கும் குட்டிக்கதைகள், நுால் வாசிப்புக்கு பெரிதும் துணை செய்கின்றன.
–மெய்ஞானி பிரபாகரபாபு