கா.சுப்பிரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை), 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் பேரறிஞர், சட்டக்கலை வல்லுனர். நெல்லைச் சீமை தந்த நேர்மைமிகு வரலாற்று ஆய்வறிஞர்; சமய நுால் பல தெளிந்தவர்.
பல தமிழ் இலக்கிய, இலக்கணங்களை ஆராய்ந்து, வடமொழி தன்னையும் ஆராய்ந்து, தமிழ்மொழி வடமொழி வழியில் வந்த மொழியன்று; சிவஞான போதம் வடமொழி மூலம் கொண்டதன்று என நிறுவியவர்.
முதல் முதலில், எம்.எல்., படித்துப் பட்டம் பெற்றவர். அதனால், எம்.எல்., பிள்ளை என்று போற்றப்பட்டவர். அறிஞர் தெ.பொ.மீ., எம்.பக்தவத்சலம் போன்றோர் இவரிடம் சட்டக் கல்லுாரியில் படித்தவர்கள்.
முன்னாள் அமைச்சர் பெருமக்கள் நெடுஞ்செழியன், அன்பழகன், இவரின் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்.
இலக்கிய வரலாறு, கட்டுரைக் களஞ்சியம் போன்ற பல நுால்களை எழுதிப் பெருமையுற்றவர். உலகின் பல்வேறு நாடுகளில் அறிஞர் பலர் தோன்றி, சாதனைகள் ஆற்றியுள்ளனர். அத்தகைய உலகப் பெருமக்களுள் ஆகாகான் துவங்கி ஸ்டாலின், முசோலினி, ரூஸ்வெல்ட்,முஸ்தபா கமால், காந்தியடிகள், பெர்னாட்ஷா, செகப்பிரியர் போன்ற பதினைந்து பெருமக்களைப் பற்றி கா.சு.பிள்ளை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நுால்.
ஆகாகான் அரண்மனை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கீழை நாடுகளில் மட்டுமன்றி மேலை நாடுகளிலும் புகழ்பெற்ற சமய அறிஞர் ஆகாகான். இவரைக் கடவுளாகவே கருதி வழிபட்டவர்கள் இருந்தனர்.இந்தியாவில் பிறந்து உலகம் முழுவதும் சுற்றிப் புகழ் பெற்றவர்.
உருசியாவின் அதிபராக விளங்கிவர் ஸ்டாலின். ஆட்சி அதிகாரம் எனும் மதிப்பில் ஆழ்ந்து விடாமல் மக்களுக்காகச் செயல்பட்ட தலைவர். முசோலினி ஒரு சர்வாதிகாரி என அறிவீர்கள்.
பாசிசக் கொள்கை உடையவர். உள்ளமோ, உடலோ, பொருளோ எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தம் என்பது பாசிசத்தின் அடிப்படை. மகாத்மா ஆன விதத்தை பெருமிதத்துடன் காந்தியடிகள் பற்றி எழுதியுள்ளார் முஸ்தபா கமால் துருக்கியர். புரட்சிகரமான சீர்திருத்தவாதி. சிறுபான்மை சமூகத்தின் சிறந்த தலைவர்.
பெர்னாட்ஷா உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர், இலக்கியவாதி. ஷேக்ஸ்பியர் மிகச்சிறந்த நாடகாசிரியர். இப்படிப் பலரைப் பற்றியும் சொன்னால் மதிப்புரை நிறைவுறாது. அன்றியும் நுால் எழுதப்பட்ட காலத்தில் இவையெல்லாம் புதுமைச் செய்திகள்.
இன்றோ மக்கள் பரவலாக அறிந்த பெருமக்களைப் பற்றி முழுவதும் அறிய நுாலை முழுவதும் படிக்க வேண்டும். நுால் பிரியர்கள் அனைவரும் படிக்கலாம்.
– கவிக்கோ ஞானச்செல்வன்