பல வருடங்களாகப் புத்தகம் புனிதமாகக் கருதப்பட்டு வந்ததில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிரதி என்ற நிலையில் புத்தகத்தினுள் பொதிந்துள்ள பல்வேறு குரல்களை அடையாளம் காண வேண்டியது, நவீனத் திறனாய்வின் மிக முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
பின் நவீனத்துவ விமர்சனப் போக்குக் காரணமாகப் பல்லாண்டுகளாக சமூகம் கொண்டாடும் பாரம்பரியமான எழுத்தாளர்களின் மாபெரும் படைப்புகளில் அவர்கள் அறிந்தும், அறியாமலும் வெளிப்படும் பிற்போக்குத்தனம்...
அதிகாரம் போன்றவற்றைத் தோலுரித்துக் காட்டுவதாக நவீனத் தமிழ்த் திறனாய்வுப் போர்டு மாறிக் கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதும் கூட என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் நுாலாசிரியர்.
அந்த அடிப்படையில் அ.மார்க்சிஸ்ட், தனிநாயக அடிகளார், ராஜமார்த்தாண்டன், கோ.கேசவன் முதலானோரின் விமர்சனப் போக்குகளையும் லா.ச.ரா., சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற படைப்பாளர்களின் ஆளுமை பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ள, 12 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நுால்.
லா.ச.ரா.,வின் பக்தர்கள், சுஜாதாவின் ரசிகர்கள் அவர்களைப் பற்றிய ஆசிரியரின் கருத்துக்களை ஏற்பரா என்பது சந்தேகம். ஆனால், விருப்பு வெறுப்பின்றி படிக்கும் ஆர்வலர்கள் அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்படும் நியாயங்களை அடையாளம் கண்டு கொள்வர்.
– சிவா