சூரியன் தன் ஒளியால் உலகிற்கு ஒளி அளிப்பது போல, தங்களின் தத்துவ ஒளியால் உலக மக்களுக்குப் புத்துயிர் ஊட்டிய இரு பெருமக்களைப் பற்றிக் கூறுவதே இந்நுால்; காரல் மார்க்ஸ், விவேகானந்தர் என்போரே அவர்கள்.
இருவரும் வெவ்வேறு துருவங்களாக விளங்கினாலும், சமுதாய மாற்றத்தை விரும்பியோர் என்ற புள்ளியில், இந்நுால் இருவரையும் ஒன்றிணைக்கிறது. சமுதாய மாற்றத்துக்கு அவர்கள் கையாண்ட வழிகள் தான் வெவ்வேறு என்பதையும் இந்நுால் எடுத்துரைக்கிறது. இதனுள், 11 தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றுள், ‘இந்தப் புத்தகம் எதற்கு’ என்னும் முதல் தலைப்பானது, நுாலுக்கு முன்னுரையாக அமைகிறது. ‘காரல் மார்க்ஸ், விவேகானந்தர் பற்றிக் கூறுவதன் மூலம் சமூகத்திற்கு இவர்களின் பங்களிப்பு என்ன?
இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விடை தேடும் முயற்சியே இந்நுால் என்பதைத் தெளிவாக நுாலாசிரியர் விவரிக்கிறார்.
‘தத்துவம் - சில உண்மைகள்’ என்னும் தலைப்பினில் மார்க்ஸ் உலகம் முழுவதையும் பொருளாகக் கண்டதையும், மாறாக, விவேகானந்தர் ஆன்மாவாகக் கண்டதையும் பற்றி விவரிக்கிறார். இரண்டில் எது இன்று தேவை என்பதையும் விவாதித்து நிறுவப்பெற்றுள்ளது.
அடுத்ததாக, ‘மதம்’ குறித்த சில உண்மைகளை எடுத்துரைக்கிறது. இதற்கு அடுத்ததாக சனாதன தர்மம் என்பதையும், உலகு தழுவிய தர்மம் எது என்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறுகிறது.
இவற்றை எல்லாம் விவாதித்த பின், இந்தியாவின் எதிர்காலம் குறித்து விவேகானந்தர் சொற்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, ‘விவேக மொழிகள்’ என்னும் தலைப்பில் விவேகானந்தரது பொன்மொழிகளை வரிசைப்படுத்தித் தந்துள்ளது சிறப்பானது.
இளைய சமூகம் முதல் அனைவரும் படித்து, நம் சமூகத்தின் மாற்றத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க உதவும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்