ஆங்கில இலக்கியத்தில், உலகப் புகழ் பெற்ற கடிதங்கள் நுால்களாக வெளிவந்துள்ளன. தனி ஒரு இலக்கிய வகையாகவே கடித இலக்கியத்தைக் கருதலாம். எழுத்தாளர்களின் உள்ளத்தைப் பல வகைகளிலும் அறிதற்குக் கடிதமே வாயில் அமைத்திருக்கிறது.
இந்தத் தொகுப்பு நுாலில், 18 எழுத்தாளர்களின் அரிய கடிதங்கள் அடங்கியுள்ளன. பாரதி, புதுமைப்பித்தன், பாரதிதாசன், டி.கே.சி., கு.அழகிரிசாமி, கி.ரா., மு.வ., சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், வெள்ளியங்காட்டான்...
எம்.எஸ்.உதயமூர்த்தி, வண்ணதாசன், தனுஷ்கோடி ராமசாமி மற்றும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, தொ.மு.சி., பொன்னீலன், தஞ்சை பிரகாஷ் ஆகியோர் கடிதங்களும், இவர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களும் இடம் பெற்றுள்ளன.
பாரதி, தம் தம்பிக்கு எழுதிய கடிதத்தில், தம்பியை ‘இனிமேல் இங்கிலீசில் காயிதம் எழுதாதே. தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க ஆவலுறுவதாக எழுதியிருப்பது, பாரதி ஆங்கிலத்தில் எழுதுவதைத் தவிர்க்கச் சொல்லியிருப்பதைக் காண முடிகிறது.
புதுமைப்பித்தன் தம் மனைவியை நேசித்த உணர்வு, அவரது கடிதங்களில் ஆழமாக வெளிப்பட்டுள்ளது. ரசிகமணி டி.கே.சி., கடிதங்கள் மிகவும் சுவை தருபவை. கு.அழகிரிசாமி, கி.ரா.,வுக்கு எழுதிய கடிதங்களில் இருந்து, கு.அழகிரிசாமியின் இசை ஞானம் தெரிய வருகிறது.
கி.ரா., தம் மகள் பாரதி தேவிக்கு எழுதிய கடிதங்கள் வழியே, தம் மகளுக்கு நல்ல நாவல்களைத் தேடிப் பிடித்துப் படிக்கச் சொல்லியிருப்பதோடு, நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதில் தமக்குள்ள ஆர்வ வெளிப்பாட்டையும் புலப்படுத்தியுள்ளார்.
மு.வ., கற்பனைக் கடிதங்களாக அன்னைக்கு, தம்பிக்கு போன்ற தலைப்புகளில் சில நுால்களை எழுதியிருந்தாலும், அவர் தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தால் அவரது தன்னிலை விளக்கம் இந்நுால் வழி அறியப்படுகிறது.
சு.ரா., எழுதிய மடல் இலக்கிய நுகர்வையும், சு.ரா.,வின் அன்றாட நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளது.
வல்லிக்கண்ணனின் கடிதங்கள், எம்.எஸ்.உதயமூர்த்தி கடிதங்கள் ஆகியவை சுவையானவை. வண்ணதாசனின் கதை எழுதும் திறத்தைக் கடிதத்தின் வழியாகவும் அறிய முடிகிறது.
இந்நுாலின் தொகுப்பாசிரியரான ஆர்.காமராசுவுக்கு, தனுஷ்கோடி ராமசாமி எழுதிய ஆறு கடிதங்களும் முக்கியமானவை. ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு, கரிச்சான் குஞ்சு எழுதிய கடிதம், கரிச்சான் குஞ்சுவின் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலை வெளிப்படுத்தும்.
தம் மகளுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்து விட்டு அவர் பட்ட பாட்டை விவரிக்கும் அவரது கடிதம், ஒரு சோக ஆவணமாக இதில் இடம் பெற்றுள்ளது.
தஞ்சை பிரகாஷ், ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு எழுதிய டி.கே.சி., குறித்த கடிதம், மிக நீண்ட தாயின் தகவல் நிறைந்தது. கடித இலக்கியத்திற்கென்றே சாளரம் நடத்தி வந்த பிரகாஷுக்கு, தொ.மு.சி., எழுதிய கடிதம் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பாசிரியன் பணி சிறப்பானது. எழுத்தாளர்களின் பல்வேறான மனநிலைகளைப் புரிந்து கொள்ள வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
தொகுப்பாசிரியர், இன்னும் பல்வேறு கடிதங்களைத் தொகுத்திருக்க இடமுண்டு. இது ஒரு நல்ல தொகுப்பு என்பதில் ஐயமில்லை. ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.
– ராம.குருநாதன்