மறைவாக ரகசியமாக பேசப்படுவது காதலும், காமமும். இன்றோ ஊடக வெளிச்சத்தில் பாலியல் வன்முறைகள் உலா வருகின்றன. செய்தித் தாள்களில் காட்சிப் பொருளாகி விட்டன. ரகசியமான வாழ்வியல் நுட்பங்கள் அம்பலமாகி விட்டன.
‘அகம்’ என்றும், அகத்திணை என்றும் உள்ளே இருந்த காமத்தை, காலம் புறந்தள்ளி, ‘புறம்’ ஆக்கிவிட்டது. இருளை வெளிச்சமிட்டுக் காட்டும் காலமிது.
புலன்களையும், பொறிகளையும் கட்டுப்படுத்தாத ராவணன் எவ்வாறு காமத்தால் அழிந்தான் என்னும் ரகசியத்தை, தமிழருவி மணியன் இந்நுாலில் வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார். மேடையில் அவரது தேன் மழைத் தமிழ் போல, அவரது எழுத்து, நுாலில் அமுதமாய் இனிக்கிறது.
இந்நுால் எழுதக் காரணமாய் அமைந்த களத்தை காட்டுகிறார். ‘ஒடுங்கிக் கிடந்த காமம் என்னும் சாத்தான், நுகர்பொருள் கலாசாரத்தின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தின் சாபமாக மாறி விட்டது. தமிழினம் விழித்து எழாவிடில், குடும்பக் கட்டுமானம் அடியோடு குலைந்து போகும்’ (பக். 5).
நுாலின் முதல் பகுதியில், ராமாயண ரகசியம், கம்பன் காத்த பண்பாடு, ரகசியத்தின் ஊற்றுக்கண், மதி இழந்த தசமுகன், காமம் சிதைத்த கம்பீரம், மும்மடங்கு பொலிந்த முகங்கள் ஆகிய தலைப்புகளில் புதிய சிந்தனைகளை எழுதியுள்ளார்.
வால்மீகி, வியாசர், ஹோமர், வர்ஜில் மில்டன், தாந்தே போன்றோர் படைப்புகளுடன் கம்பனை ஒப்பிட்டு வ.வே.சு., அய்யர், ‘உலக மகாகவி’ என்று உயர்த்திக் காட்டுவதை விளக்குகிறார்.
‘கம்பன் எழுதுகோல் ஏந்தி ஓர் அற்புதமான காப்பியத்தை வழங்கியதால் தான், தமிழ் சாகா வரம் பெற்றது’ என்கிறார்.
‘வசிட்டர் ராமனுக்கு வழங்கிய நல்லுரைகள், ‘யோக வாசிஷ்டம்’ என்னும் படைப்பு. இதில் காம இச்சையின் ஆணி வேர் எண்ணத்தில் உள்ளது. எண்ணத்தை கட்டுப்படுத்தி நல்ல சிந்தனை வழியில் செலுத்த வேண்டும்’ என்கிறார் (பக். 24).
வாலிக்கும், துந்துபிக்கும் மூத்தவனான மயன் மகன் மாயாவுக்கும் குகைக்குள் ஓராண்டு சண்டை நடந்ததற்கு காரணம், ஒரு பெண் தான்.
கம்ப ராமாயணத்திற்கும், வால்மீகி ராமாயணத்திற்கும் உள்ள வேறுபாட்டை அங்கங்கே பிரித்துக் காட்டியுள்ளது, நுாலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்குச் சான்றாகும்.
வால்மீகியின் தாரை, வாலி மறைந்ததும், சுக்ரீவனுடன் சேர்ந்து பட்டத்து ராணியாகி விடுகிறாள். ஆனால், கம்பன் கண்ட தாரை கைம்மைக் கோலம் கொள்கிறாள் என்பதை நுட்பமாக விளக்கியுள்ளார்.
சூர்ப்பனகை தான் கொண்ட காமத்தை, ராமனிடம் வெட்கமின்றி கூறுகிறாள். ‘காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி’ என்றாள். இதைக் கேட்டதும், ராமன் வெறுப்புறுகிறான். இது, வால்மீகியில் இல்லாத கம்ப சித்திரம் என்று விளக்குகிறார் ஆசிரியர்.
ராவணனை வீரம், பெருமிதம் யாவும், ‘பெண் பால் வைத்த ஆசை நோயால் போயின’ என்பதை கம்பன் பாடல்களுடன் கனி ரசமாய் நமக்கு தருகிறார் நுாலாசிரியர்.
காமத்தால் அழிந்த ராவணன் நிலையையும், காதல் மகனாய் இருந்து வீழ்ந்த இந்திரஜித்தின் வீரத்தையும், இரண்டு கம்ப ஓவியங்களை அழகாக வார்த்தைத் துாரிகையால் ஆசிரியர் வரைந்து காட்டியுள்ளார். தமிழ் அருவியில் நனைந்து, கம்பக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வைக்கிறது இந்த கம்ப திறனாய்வு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்