ஏழைகளின் பொருளில்லா உலகம் மிகவும் துயரமானது. இளம் பருவத்தில் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அவதிப்படும் இல்லறப் போராட்ட யுத்தங்கள் வாலிபத்தையும், வாழ்க்கையையும் சேர்த்து உறிஞ்சி விடுவது கொடுமையானது. அப்படிப்பட்ட களரில் இருந்தும் வெடித்து முளைத்து, மரமாகிவிடும் விதைகளும் உள்ளன.
த.பி.சொக்கலால் பீடி கம்பெனியில் பீடி சுற்றும் வேலையைச் செய்தபடி, பற்றாக்குறைகளோடு முக்கூடலில் வாழ்ந்த நேர்மையான பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, மாற்றுத் துணிக்கும், மற்ற தேவைகளுக்கும் அவதிப்பட்டு, படிப்பில் படிப்படியாக உயர்ந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து, அரசு மருத்துவராகி, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகவும் பெயர் பெற்ற டாக்டர் சிவலிங்கத்தின் வாழ்க்கைப் பதிவு இந்நுால்.
கருப்பட்டி வியாபாரம் செய்தது, மாடு குளிப்பாட்டியது, மருத்துவப் படிப்பில் சேர ஜாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிந்தது என்ற பல தகவல்கள் நெஞ்சை உறுத்தும்.
தான் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளில், காலத்தே உதவி செய்தவர்களின் கருணை அனைத்தையும் நன்றியோடு நினைவுகூர்கிறார் ஆசிரியர்.
நேர்கொண்ட இடையூறுகள், பயிற்சி மருத்துவராகப் பணியாற்றியபோது நிகழ்ந்த மருத்துவர் வேலை நிறுத்தத்தின்போது, முதல்வர் காமராஜர் நேரடியாகக் குறுக்கிட்டு, கேட்ட உதவித் தொகையை உடனடியாக வழங்கிய பெருந்தன்மையைக் குறிப்பிட்டு நெகிழ்கிறார்.
கசப்பான நிகழ்வுகள் எத்தனை வாட்டினாலும், உயரும் கனவுகளில் உறுதியாக இருந்தால் அனைத்தும் எண்ணியபடி நிறைவேறும் என்பது, நுாலில் மன உறுதியோடு வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
– மெய்ஞானி பிரபாகரபாபு