தனிநபர் வியாபாரி ஒரு சின்ன வேலையைச் செய்வதற்கே பல விதமான முன்னேற்பாடுகள் தேவைப்படுகின்றன. நெடுங்காலம் இயங்கவல்ல வர்த்தக நிறுவனம், களத்தில் நிலைத்து நிற்பதற்கு முன்னெடுக்க வேண்டிய திட்டங்களை வரிசைப்படுத்தினால் ஒரு பெரிய பட்டியலே உருவாகும்.
தொழில் துறை என்பது மிகவும் சவாலானது. தோற்றாலும் எழும் வல்லமை உள்ளவர்கள் மட்டுமே, அதில் நிலைக்க முடியும். நிறுவனத்தின் மேலாண்மையில் உருவாகும் சிறு சிறு பலவீனங்கள்கூட கோபுரமாய் நிற்கும் நிறுவனத்தையும் தரைமட்டமாக்கிவிடும்.
பல்வேறு எதிர்ப்புச் சூழல்களிலும் பெரிய இலக்குகளை அடையவும், பின்னடைவு இல்லாமல் தொழில் புரியவும், ஒவ்வொரு கட்டத்திலும், ‘ஸ்ட்ராட்டஜி’ எனப்படும் முன்னடைவுத் திட்டங்கள் அவசியம் என்பதில் தொடங்கி, தொழில் வெற்றிக்கான பல உத்திகளை இந்நுாலில் வகைப்படுத்தி வழங்கியிருக்கிறார் பேராசிரியர் ஸ்ரீராம்.
எந்த பின்புலமும் இல்லாமல் சிறிய அளவில் தொழில் துறையில் தடம் பதித்து படிப்படியாக உயர்ந்து கூட்டாண்மை நிறுவனங்களை நிறுவும் அளவுக்கு உயரும் வெற்றிகரமான பல நிறுவனங்களின் வரலாறுகள் வியக்க வைக்கும்.
பணியாளர்கள் மனோநிலை, வாடிக்கையாளர்களின் உணர்வோட்டம், போட்டியாளர்களின் முனைப்புகள், அரசுக் கொள்கைகள், இயற்கைச் சீற்றங்கள் இவற்றுக்கிடையே நிறுவனத்தை மன உறுதியோடு முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் நுாலெங்கும் வலியுறுத்தப்படுகிறது.
புதிய தொழில் முனைவோர்களும் புரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. தொழில் முனைவோர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டு நுால்.
–மெய்ஞானி பிரபாகரபாபு