திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து வந்து, காஞ்சிபுரத்தை அடுத்த கூரத்தை தலைநகராகக் கொண்டு, அரசாண்ட சிற்றரசர்கள் மரபில் தோன்றியவர், கூரத்தாழ்வார்.
இவர் திருப்பெயரை ஸ்ரீவத் சங்கா, ஸ்ரீவத்ஸ சின்ஹர், திருமருமார்பன் என்றெல்லாம் குறிப்பிடுவதுண்டு.
இவர் அரசைத் துறந்து ஸ்ரீபகவத் ராமானுஜரின் முதன்மை சீடராகி விசிட்டாத்வைதக் கொள்கைகளைப் பரப்பினார்.
திருமணம் நிகழ்ந்தால் கணவன் இறந்து விடுவான் என்ற அமைப்புடைய ஜாதகம் கொண்ட ஸ்ரீ ஆண்டாள் என்ற பெண்ணை, இவர் மணந்து கொண்டார். இது கூரத்தாழ்வானின் முதல் புரட்சி.
வேதம் உபநிடதம் முதலியவற்றில் கூரத்தாழ்வானுக்கு ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து, விளக்கம் அளிக்கும் அளவுக்கு இம்மங்கை நல்லாள் பேரறிவாற்றல் பெற்றவள்.
இவரும் ராமானுஜரின் பெண் சீடர்களுள் முதன்மையாக விளங்கினார். இவர் கூரத்தாண்டாள் எனப் போற்றப்பட்டார். (காண்க, பக்: 85 – 88) இவரைப் பற்றிய செய்திகள் நுாலின் ஊடேயும் வருகின்றன.
இந்நுாலை முற்றக் கற்கும்போது இந்நுாலில் ராமானுஜரைப் பற்றிய செய்திகள் அதிகமா, கூரத்தாழ்வானின் செய்திகள் அதிகமா எனப் பட்டிமண்டபமே நிகழ்த்தத் தோன்றும்.
அதற்குக் காரணம், இருவரின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று உயிரும் உடலும் போல ஒட்டிய நிலையே என்கிறார் ஆசிரியர்.
பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் செய்தவர் ராமானுஜர். அதுவே ராமானுஜ தர்சனம். அதிலிருந்து தோன்றி கொள்கைப் பிரகடனமே விசிட்டாத்வைதம்.
அதன் கொள்கைப் பரப்புனர் என்றே கூரத்தாழ்வானைச் சொல்லலாம். இந்நுாலின் பிற்பகுதியைப் படித்தால் விசிட்டாத்வைத தத்துவங்கள் எளிதில் புரியும் என்பதில் ஐயமில்லை. இந்நுாலைப் படித்த பின் ஸ்ரீபாஷ்யம் படிப்பது உசிதம் என்றும் சொல்லலாம்.
சைவத்திற்கு மாறுபட்ட செய்திகளை, நிகழ்வுகளை இன்னும் சற்றே நாசூக்காக அணுகியிருக்கலாம்.
இந்நுால், 42 அரிய படங்களுடன் வெளிவந்திருக்கிறது. வைணவத்திற்கும் வைணவ விசிட்டாத்வைதம் பற்றி அறியும் வேட்கை உள்ளோருக்கும் பேருதவியானது இந்நுால் என்பது திண்ணம்.
–புலவர் .ம.வே.பசுபதி