‘கவியரங்கத்தில் அப்துல் ரகுமான் பாடினால், அதற்குப் பின் வேறு யாரும் கவிதை படிக்க முடியாது’ என்று கவியரசு கண்ணதாசன் வியந்து பேசுவார்!
‘கவி அரங்க மேடைகளில் கவிதை என்ற பேரில் யாப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்தனர்.
நான் அந்த மேடைகளில் கவிதையைக் கொண்டு வந்தேன். துாங்கி வழிந்து கொண்டிருந்த அரங்கங்களை ஆரவாரம் செய்து ரசிக்க வைத்தேன்.
கவியரங்கங்களே என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தின. மக்களுக்கு நான் நல்ல கவிதையை அறிமுகப்படுத்தினேன்’ என்பார் அப்துல் ரகுமான்!
அவ்வை – பற்றிக் கவி பாட வந்த ரகுமான் சொல்வார் –
‘இல்லறத்தைத் துறந்தவளே!
ஏன் துறந்தாய்? நீதி சொல்லும்
சொல்லறமே சிறந்ததென்று
சொல்லத் துறந்தாயோ?
பா மணக்கப் பாடிப் பதப்படுத்த வந்தவளே!
நீ மணக்கவில்லை உன்
நெடும் பாட்டு மணக்கிறது!
பாரதியாரைப் பற்றிப் பாவலர் சொல்வது இது:
கவிதைக்கு நீ தான் மறுவுயிர்ப் பளித்தாய்
சிலர் பாடையாக்கி வைத்திருந்த யாப்பை
கனவுகளின் பூ விமானம் ஆக்கியவன்
நீ தான் உன் சூரியச் சொற்கள்
தொட்டு எழுப்பியபோது கண் விழித்தவர்கள்
துாங்கிக் கிடந்தவர்கள் மட்டும் அல்லர்
செத்துக் கிடந்தவர்களும் தாம்.
அப்துல் கலாம் மறைந்தபோது எழுதினார்:
அப்துல் கலாம்! உன் மரணத்தில் மரணமும்
அழுதது; குர்ஆன் உன்னைப் பெற்ற தாய்
குறள் உன்னை வளர்த்த தாய்
அதனால் நீ சாதித்தாய்
இராமன் கணைகளை ஏவினான்
இராமாயணம் பிறந்தது!
நீ ஏவு கணைகளைச் செலுத்தினாய்
புதிய பாரதம் பிறந்தது.
பாடித் தமிழ் வளர்த்த இந்தப் பாவலனின் நாடித் துடிப்பைச் சொல்லும் நன்னுால்! செந்தமிழ் இலக்கியப் பொக்கிஷம்!
– எஸ்.குரு