சென்னை தினத்தை முன்னிட்டு, 2017ம் ஆண்டு நடத்திய, ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு தான், ‘எம்டன் செல்வரத்தினம்!’ முதல் பரிசுக் கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் இருக்கிறது.
கடந்த, 1914ம் ஆண்டு ஜெர்மானியக் கப்பல் எம்டன் மதராஸ் மீது குண்டு வீசிய தருணத்தை கற்பனை கலந்து கொஞ்சமும் உறுத்தாமல் வரலாற்றுக் கோணத்தில் விவரித்துப் பார்க்கும் கதை. 68, லாயிட்ஸ் ரோடு வாசலில் விரியும் ராயப்பேட்டை வீடு.
காமத்தை தகனம் செய்தபடி, ஒரு சித்தாளின் பார்வையில் நகரும் வாழ்க்கை. நகரத்து மத்தியில் நடைபாதையில் இருந்த வாழ்வை நகர்த்தி வீட்டிற்காக ஊருக்கு வெளியே கொண்டு செல்லும் புலம் பெயர்வு.
ஊரிலிருந்து சென்னை வந்து மழையோடு நாட்களைக் கழித்து, ஏ.டி.எம்., காவலாளியாக நகரும் கிழவரின் வாழ்வு என்று சுற்றிச் சுற்றி சென்னையில் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை கண் முன் கொண்டு நிறுத்துகிறது கதைகள்.
மனிதர்களின் வாழ்க்கையை, வாழ்வியலை, அவர்களது உணவை, பொருளாதார இயக்கத்தை, அது சார்ந்த மொழிக் கட்டமைப்பை, உடையை, கலையை இன்றும் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் தவறாமல் உள்ளடக்கி இருக்கிறது.
சிறுகதைப் போக்கு மலிந்து வரும் வேளையில் அதை உயிர்த்திருக்கவும், உயிர்த்தெழவும் செய்யும் முயற்சி என்றே சொல்லலாம்.
சென்னைக்காரராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், பலரும் படிக்க வேண்டிய கதைகள் இவை என்று தாராளமாக சொல்லலாம்.
– ஸ்ரீநிவாஸ் பிரபு