குமரி நாட்டில் சமணம் கள ஆய்வு செய்து, தரவுகளைத் திரட்டி, ஒரு நுாலை வெளியிடுதல் பகீரதப் பிரயத்தனம். ஆசிரியர் பெரிதும் முயன்று, சமணர் வாழ்ந்த இடங்கள், சமணக்கோவில்கள், சமணர்களின் வாழ்வியல் செய்திகள் என்பனவற்றை எல்லாம் கண்டும், கேட்டும் ஆய்வு நோக்கில் வெளியிட்டுள்ளார்.
சமண சமயம் ஒரு சிறப்புப்பார்வை துவங்கி, 14 தலைப்புகளில் விளக்கம் பெறுகிறது. பின்னிணைப்பாக, தீர்த்தங்கரர்கள் என்று, நான்கு உட்தலைப்புகளில் விளக்கம் பெற்று, நுால் நிறைவெய்துகிறது.
சமண சமயத் தோற்றம்: இந்திய நாட்டின் மிகப் பழமையான சமயம், சமண சமயம் ஆகும். சமண சமயம் எப்போது தோன்றியது என்று, எவராலும் அறுதியிட்டுக் கூற இயலாது (பக்.,83).
சமண சமய வளர்ச்சி: கடல் கோள்களால், குமரி நாடு கடலில் மூழ்கிய போது, அங்கிருந்த சமணத் தடங்கள் அழிந்து விட்டன.
எஞ்சியிருந்த சமணர்களாகிய தமிழர்கள், குமரி மாவட்டம் உட்பட, தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடியேறினர். இரண்டு சான்றுகள் மூலம் சமணர்கள் வடக்கிலிருந்து, தெற்கு வந்தனர் என்பது பெறப்படுகிறது.
தொல்காப்பிய பாயிரத்திற்கு, நச்சினார்க்கினியர் எழுதிய உரையின் வழி பெறப்படுகிறது. சந்திர குப்த மன்னன், அரசைத் துறந்து, துறவு பூண்டு, பத்திரபாகு முனிவரின் சீடனாக, அவருடன் வந்தார்.
தென் திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில், ‘சிரவணபௌகொளா’ என்ற இடத்தில், தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார் (பக்.99). சமண சமயம் வீழ்ச்சி அடைவதற்கு, பிற சமயங்களின் வளர்ச்சி, கொள்கைகள் காரணம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
அதற்கு பக்தி இலக்கிய ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார். கேரளத்திலும், குமரியிலும் உள்ள தற்கால பகவதி கோவில்கள் அனைத்தும், முற்காலத்தில் சமண பள்ளிகளாக இருந்தனவாம் (பக். 413). சமணரின் பண்பாடு, சமணர் இயற்றிய இலக்கியங்கள், சமணரின் மருத்துவக்கலை முதலியவை சிறந்த வரலாற்று ஆய்வாகும்.
வரலாறு பயில்வோருக்கும், ஆய்வு செய்வோருக்கும், இந்த நுால் சிறந்த வழிகாட்டியாகும். சமண சமயம் பற்றி அறிந்து கொள்வதற்கு, இந்த நுால் பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை.
–பேராசிரியர் இரா.நாராயணன்