‘இந்திய பயண உலகின் தந்தை’ எனப் புகழப்படும் ராகுல் சாங்கிருத்யாயன், கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், ஐரோப்பியத் தத்துவார்த்த சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறார்.
அதுவே ஐரோப்பியத் தத்துவ அறிஞர்கள் குறித்த பார்வையையும், தத்துவங்களையும், சமயங்களையும் முழுமையாக ஐரோப்பியத் தத்துவ இயல் நுாலில் முன் வைத்துத் தந்துள்ளார்.
யுனிக் தத்துவவியலாளர்களில் (கி.மு. 600 – 400) வரை ஆரம்பித்து, முதல் அடிப்படை சூட்சுமத் தத்துவமான ‘முடிவில்லாத’தில் துவங்கி, பகுத்தறிவு வாதம், கிரேக்கத் தத்துவ இயலின் வளர்ச்சி நிலை, தத்துவத்தின் சிறப்பு, தத்துவக் கருத்துக்கள், எண்ணம், கடவுள், பகுத்தறிவு என்று எவ்வாறு நீள்கிறது என்பதை வரிசை மாறாமல் காட்டுகிறார்.
பதினெட்டாம் நுாற்றாண்டில் எண்ண முதல் வாதம், சந்தேக வாதம், லோகாயத வாதம் வளர்ந்த விதம் குறித்தும், பத்தொன்பதாம் நுாற்றாண்டில் கார்ல் மார்க்ஸ்சின் தத்துவ இயல் கண்ட வளர்ச்சி பற்றியும் விவரிக்கிறார்.
கடவுள் சித்தாந்தம், விஞ்ஞான வளர்ச்சி, அறிவின் எல்லை, அறியாமையின் எல்லை என அனைத்தும் இருபதாம் நுாற்றாண்டில் மனிதனுக்குள்ளிருந்து கிளம்பியதை தத்துவவியலாளர்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என்பது பற்றி விரிகிறது ஆய்வு.
தலைமுறை கடந்த ஐரோப்பியத் தத்துவவியலாளர்கள் பலர் குறித்து ஒரு முழுமையான சித்திரத்தை ஒன்றன் பின் ஒன்றாக நம் முன் விவரித்துக் காட்டுகிறது புத்தகம்.
மனிதர்கள் தத்துவ இயலில் எத்தனை நுாற்றாண்டுகளை கடந்து வந்தபோதும் இன்றளவும் ‘விஞ்ஞான ஆராய்ச்சிகளால் நிரூபிக்க முடியாத நம்பிக்கையின் விருப்பமே பக்தி’ என்று முத்தாய்ப்பாக முடிப்பது தான் சிறப்பு.
– ஸ்ரீநிவாஸ் பிரபு