தெய்வத்தின் குரல், ஸ்ரீமடம் பாலு எழுதிய, ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ போன்ற நுால்களின் பயனோடு, காஞ்சியின் கருணை தெய்வம், மகானின் அவதார மகிமை துவங்கி, 48 கட்டுரைகளில், ஆங்காங்கே தெய்வாம்சம் பொருந்திய காஞ்சி முனிவரின் படங்களோடு, மகானின் அற்புதங்களை தேர்ந்தெடுத்து, படைத்துள்ளார் நுாலாசிரியர்.
‘அஷ்டமா சித்துக்கள் என்பவை ஞானியரின் வாழ்க்கையில் தேவையற்றது; அவற்றால் கடவுளை அடைய முடியாது...’ (பக்.,38) ‘விளங்கும் பொருட்கள் எல்லாம் பிரம்மம் என உணர்ந்து நேயம் கொள்ள வேண்டும். உள்ளம் உயர்வடையும் போது, ஞானத்தால் நிறையும். குருவை உணர்ந்து அவரால் உபதேசிக்கவும் பட்டவன், நிச்சயம் ஜீவன் முக்தனாவான்...’ (பக்., 67)
‘பிறரால் மதிக்கப்படவும், பூஜிக்கப்படவும், வெகுமானத்தையும் எதிர்பார்த்து காவியும், தண்டமும் தரித்தவன், சன்னியாசி ஆக மாட்டான்; ஞானத்தில் பொதிந்து நிற்பவனே உண்மையான சன்னியாசி...’ (பக்., 112)
–இப்படி ஸ்ரீகுரு கீதையின் வாசகங்களுக்கேற்ப மகானின் அற்புதங்களையும், ஈசவாஸ்ய உபநிடதம், கேனோபநிடதம், திருமந்திரம், ராமகிருஷ்ண பரமஹசம்சரின் உபதேச மொழிகளுக்கேற்ப, மகானின் அற்புத அனுபவங்களை அன்பர்கள் படித்து, அருட்சிந்தனையில் ஈடுபடுமளவிற்கு நுாலாசிரியர் படைத்துள்ளார்.
– பின்னலுாரான்