கவிதை எழுதுபவன் அனைவரும் கவிஞன் அல்ல; எவன் வாழ்க்கைக்காக கவிதை எழுதுகிறானோ, அவனே கவிஞன் என, பாரதியார் குறிப்பிடுகிறார். அவற்றிலும் வெகு சிலரே, படைப்பாளியாக மண்ணில், மனித மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பலருக்கு வரலாறு இருக்கிறது. ஆனால், சிலரது வரலாறே, வரலாற்றில் இடம் பிடிக்கிறது. மனித மனங்களை எவர் எவர் படிக்கின்றனரோ, அவரையே மாமனிதர் என்பர். அந்த வகையில், ‘ராம்கோ’ ராஜா அவர்களின் வாழ்க்கை, நன்னெறி வாழ்க்கை என்பது இந்த நுாலில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களிலும் காண முடிகிறது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நகரங்கள் சில உண்டு. அதுபோலவே, கல்வி, கலை, இலக்கியம், தேசியம், ஆன்மிகம் என்று ஒவ்வொரு துறையில் சிறப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நகரங்கள் இருக்கின்றன.
ஆனால், இந்த அத்தனை துறைகளிலும் ஒரு சேர முத்திரை பதித்திருக்கும் நகரம் ஒன்று உண்டா என்று கேட்டால், இதோ நான் இருக்கிறேன் என்கிறது ராஜபாளையம்.
இந்தியாவே போற்றும் அளவிற்கு சிமென்ட் உற்பத்தியிலும், ராஜாகவே மதிக்கப்பட்டிருக்கிறார். முதலில் உற்பத்தியான சிமென்ட் மூட்டையை, காமராஜர் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளார்.
அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், ராஜாவின் ராஜபாளையம் ராம மந்திரம் இல்லத்திற்கோ அல்லது அவர் தொழில் நிறுவனங்களுக்கோ வருகைத் தராத அரசியல்வாதிகளோ, தலைவர்களோ இல்லை என்பது உண்மை.
ராஜிவ் பிரதமராக இருந்த போது, தன் குடும்பத்தினருடன் வந்து ராஜபாளையத்தில் தங்கிப் பழகியதை, ராஜா குறிப்பிட்டிருக்கிறார். ராஜபாளையத்தில் 10க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் இவர் துவங்கியவை. சிறப்பாக நடக்கின்றன.அதீத ஆன்மிக பற்று கொண்டவர். சிருங்கேரி மடத்துடன் அதிக தொடர்பு உண்டு.
திறமை, உழைப்பு, நேர்மை, சந்தைப்படுத்துவதில் நேர்த்தி போன்ற பல அம்சங்களால் பெருமை பெற்றவர். இந்த நுாலை தொட்டாலே, படிப்போர் ஏதோ ஒரு தொழில் செய்ய, மனதை அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
–முனைவர் க.சங்கர்