நிறைய வேலை – குறைய வேலை என்பது என் ஏட்டில் இருந்ததில்லை – இப்போதும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம், ‘வேலை’ என்பது தான். வேலையை வேலை என்று பார்த்தால் அது ஒரு பாரம், பளு.
வேலையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அங்கே வேதனை இருப்பதில்லை. வேகம் வரும். அது மகிழ்ச்சி தரும். ஒரு ஆத்ம திருப்தி மலரும். இதுவே என் கொள்கை; இயல்பு; இதுவே என் வழி. இதுவே என் வெற்றியின் ரகசியம்.
இப்படி நுாலில் ஒரு இடத்தில், தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றதன் ரகசியத்தைப் பதிவு செய்திருக்கிறார் டாக்டர் சாதிக்.
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இந்தத் துணை வேந்தர், 5ம் வகுப்பை இரு முறையும், இரண்டு ஆண்டு இன்டர் படிப்பை, மூன்று ஆண்டும் படித்தவர் என்றால் நம்ப முடிகிறதா? எண்ணற்ற உறவினர்கள், கணக்கற்ற நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பெயர்களையும், அவர்களோடு நிகழ்ந்த சம்பவங்களையும், ஒன்று விடாமல் பதிவு செய்திருக்கிறார்.
இவரது நினைவாற்றல் நம்மை மலைக்க வைக்கிறது. 70, 80ம் ஆண்டுகளுக்கு முன், நாட்டில் இருந்த சூழ்நிலையில் ஒரு சுவையான சம்பவம்.
அப்போதெல்லாம் சொத்து உள்ளவர்களுக்கு தான் ஓட்டுரிமையாம்! நாடு முழுக்கப் பயணித்து, மக்களிடம் அரசியல் பேசிய கர்ம வீரர் காமராஜருக்கு அப்போது ஓட்டு இல்லை! ஏனெனில், அவரிடம் சொத்து ஏதும் கிடையாது!
இதைப் பார்த்த முத்துராமலிங்கத் தேவர், இரண்டு ஆடுகளை வாங்கிக் காமராஜருக்குக் கொடுத்தாராம். ஒருவரிடம் ஆடுகள் இருந்தால் அதுவும் சொத்து தான் அப்போது. அந்த ஆடுகள் அவரிடம் வந்த பின் தான் காமராஜர் ஓட்டு போட்டாராம்.
நுாலின் இரண்டு பாகங்களிலும் பல கட்டங்களில் எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்களை தேடி பிடித்து நுாலில் சேர்த்திருக்கிறார்.
ஆனால், ‘பஞ்சம் பசியும்’ என்ற நாவல் விந்தன் எழுதியதாகக் பக்கம், 412 குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலை எழுதியவர் தொ.மு.சி.ரகுநாதன். பாகம் 2ல் oriented language conference என்று இருக்கிறது. oriental என்றிருக்க வேண்டும். இவற்றை அடுத்தபதிப்பில் சீராக்கினால் நல்லது.
– கேசி