‘நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லாத நமக்கு, ரகுமான் திறந்து வைத்துள்ள சாளரங்கள், வெளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை, நம் மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்புகின்றன’ என, இந்த நுாலைப் புகழ்கிறார், கவி சிற்பி!
உருது கவிஞர், கைபி ஆஸ்மி பற்றி, அப்துல் ரகுமான் சொல்கிறார்: உருது கவிஞர், கைபி ஆஸ்மி அற்புதமான கவிதைகளை எழுதுபவர். ஷபானா ஆஸ்மியும் அவர் எழுதிய ஒரு கவிதை தான்! ஆம். கைபி – ஷபானாவின் தந்தை.
ஹிந்தி திரைப்பட உலகத்தின் அற்புதமான கலைஞன், குரு தத் இறந்தபோது, கைபி ஒரு கவிதை பாடினார். புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர், சேதன் ஆனந்த் அந்தக் கவிதையைக் கேட்டுவிட்டு, ‘கைபி சாஹிப்! என் மரணத்திற்கும் இப்படி ஓர் அழகான கவிதையை நீங்கள் எழுதுவதாக இருந்தால், நான் இப்போதே இறக்கத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.
அதற்குப் பின், லக்னோ, கான்பூர், பம்பாய் நகரங்களின் நடைபாதைகளே அவர் படித்த பல்கலைக்கழகங்கள். ஏட்டுச் சுரைக்காயில் இருந்து கறி செய்யும் அவல நிலை அவருக்கு நேர்ந்ததில்லை.
ஒரு கவிதையில், கைபியின் காதலன் சொல்கிறான்: இரவு அழகானது; நிலவு அழகானது எல்லாவற்றையும் விட நீ அழகானவள் ஆனால், உன்னை விடவும் அழகானது உன் காதல்! சில சமயங்களில், கவிதைகளை விட, அப்துல் ரகுமானின் அறிமுக உரைநடை நேர்த்தியாய் மின்னுகிறது!
– எஸ்.குரு