தமிழகத்தில் அவ்வையார் என்றால் டி.கே.ஷண்முகம். டி.கே.ஷண்முகம் என்றால் அவ்வையார் என்று மிக ரத்தினச் சுருக்கமாக, ராஜாஜியால் பாராட்டப்பட்டவர், தமிழ் நாடக மேடையில், அந்த காலத்தில் ஆண்கள், பெண் வேடம் தரித்து நடிப்பது வழக்கமானது தான். ஆனால், வயதில் மிக இளைஞரான, டி.கே.எஸ்., வயது முதிர்ந்த அவ்வை பாட்டியாக வேடம் தரித்து, அதே குரலில் பேசி நடித்த பாங்கு, அவருக்கு அளவில்லாத புகழை ஈட்டித் தந்திருக்கிறது.
டி.கே.எஸ்.,சின் நாடக வாழ்க்கை, ஆறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது; ஆனால், 60 வயதில் நிறைவுற்று விட்டது. இந்த நாடக மேடையின் வாழ்க்கை வரலாற்றை, அவரது புதல்வரே, பல்வேறு பரிமாணங்களில் அருமையாக தொகுத்தளித்திருக்கிறார்.
கடந்த, 2012ல் நுாற்றாண்டு கண்ட அவ்வை ஷண்முகத்தின் ஆற்றலை புகழ்ந்து பல தலைவர்களும், தமிழர்களும் பதிவு செய்த கருத்துகளும், பாராட்டுதல்களும் ஆண்டுகள் வரிசைப்படி தொகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாடக அன்பர்களுக்கு ஒரு நல்விருந்து இந்த நுால்.
–மயிலைசிவா