‘இன்னொன்றின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், ஒரு பொருளின் அளவை அறியவே முடியாது!’ இது போன்றே, ஏதாவது ஒரு பொருள் நகராது, நிலையாகத் தன் இடத்தை விட்டு அசையாது துருவமாக இருந்தால் மட்டுமே, அதைக் கொண்டு மற்ற பொருட்களின் உண்மை வேகத்தைக் கணிக்க முடியும்.
இத்தகைய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே சார்பியல் கோட்பாடு, ஐன்ஸ்டினின் இக்கோட்பாட்டைப் பற்றி மிக மிக எளிய தமிழில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிச் சொல்கிறது இந்நுால்.
ஐன்ஸ்டினுக்கு முன்னால், 19ம் நுாற்றாண்டு இயற்பியல் வல்லுனர்கள், ஈத்தர் என்றொரு கண்களுக்குப் புலப்படாத பொருள், ஆகாயவெளி முழுவதும் நிறைந்துள்ளதாக கருதினர் .
பின்னாளில் ஆய்வு முடிவுகள் ஈத்தர் என்னும் பொருளே இல்லை எனக் காட்டியதையும் சுவையாக மனதில் பதியும்படி இந்நுால் எடுத்துரைக்கிறது.
ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியல் கோட்பாடு, பொது சார்பியல் கோட்பாடு ஆகியவை குறித்து எளிமையாகக் கூறுகிறது இந்நுால். காலமும் துாரமும் பொருண்மையும் சார்புடையது என்பதை விளக்குகிறது சிறப்பு சார்பியல் கோட்பாடு.
அறிவியல் உண்மைகளை எளிய தமிழில் சுவைபட அளிக்கும் இந்நுாலை, தமிழுலகம் நிச்சயம் வரவேற்று மகிழும் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்