சுற்றுச்சூழல் மாசாகி வரும் இக்காலத்தில் சுத்தமான காற்று எங்கே கிடைக்கிறது? தனிமனித முயற்சியால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என, இந்த நுால் மூலம் வழிகாட்டுகிறார், சித்த மருத்துவரான டாக்டர் ஜெயவெங்கடேஷ்.
ராசிக்கு பொருத்தமான மரத்தையோ, குலதெய்வத்தின் தலவிருட்சத்தையோ வீட்டில் நட்டு பராமரியுங்கள். மூலிகைச் செடிகளை வளருங்கள். சுத்தமான மூலிகை காற்று உங்களை சுற்றி வீசும் என்கிறார். நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், வேதங்களில் தாவரங்கள் என அபூர்வமான தகவல்களுடன் தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
‘இந்து மதத்தில் தாவர வழிபாடு’ என்ற தலைப்பில் ஒவ்வொரு கடவுளுக்கும் உகந்த தாவரங்களை பற்றியும், அதன் சிறப்புகளையும் நுாலாசிரியர் விளக்குகிறார். வழிபாட்டில் மூலிகைகளின் பங்கும், சுவாமிக்கு படையல் செய்யும் மூலிகை தாவரங்களின் சிறப்பும் விளக்கப்பட்டுள்ளன.
ஹோமத்திற்கு பயன்படும் மூலிகைகள், அவற்றின் சிறப்பு, ஹோமப் புகையால் விளையும் நன்மைகள் என சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதப்பட்டிருப்பது, இந்நுாலின் தனிப்பட்ட சிறப்பு எனலாம்.
மூலிகைகளை உச்சிமுகர, அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய அபூர்வ நுால்.
– ஜி.வி.ஆர்.,